TAMIL
ஒரு நாள் போட்டி தரவரிசை: முதல் 2 இடங்களில் கோலி, ரோகித் நீடிப்பு

இந்த ஆண்டுக்கான அனைத்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளும் நிறைவடைந்து விட்ட நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.),
வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதன்படி ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய வீரர்களான கேப்டன் விராட் கோலி முதலிடத்திலும் (887 புள்ளி), ரோகித் சர்மா 2-வது இடத்திலும் (873 புள்ளி) நீடிக்கிறார்கள்.
பாகிஸ்தானின் பாபர் அசாம் 3-வது இடத்திலும் (834 புள்ளி), தென்ஆப்பிரிக்காவின் பாப் டு பிளிஸ்சிஸ் 4-வது இடத்திலும் (820 புள்ளி), நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் 5-வது இடத்திலும் (817 புள்ளி) உள்ளனர்.
இந்திய தொடரில் சதம் உள்பட 222 ரன்கள் சேர்த்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் 5 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஹெட்மயர் 19-வது இடமும் (6 இடம் உயர்வு), நிகோலஸ் பூரன் 30-வது இடமும் (33 இடம் ஏற்றம்) வகிக்கிறார்கள்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா மாற்றமின்றி முதலிடத்தில் (785 புள்ளி) நீடிக்கிறார்.
நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட் (740 புள்ளி) 2-வது இடத்தில் உள்ளார்.