TAMIL
ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணி மீண்டும் தோல்வி
இந்தியா ஏ – நியூசிலாந்து ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது.
இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து ஏ அணி 7 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் சேர்த்தது. மார்க் சாப்மன் (110 ரன், 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) சதம் அடித்தார்.
தொடர்ந்து ஆடிய இந்திய ஏ அணியில் பிரித்வி ஷா (55 ரன்), ருதுராஜ் கெய்க்வாட் (44 ரன்) நல்ல தொடக்கம் தந்த போதிலும் மிடில் வரிசையில் சொதப்பினர்.
இருப்பினும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் நிலைத்து நின்று அணியை கரைசேர்க்க போராடினார்.
கடைசி 11 பந்துகளில் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டது.
கைவசம் 4 விக்கெட் இருந்தன. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்திய ஏ அணி 49.4 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இஷான் கிஷன் 71 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட இந்த தொடரை நியூசிலாந்து ஏ அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.