TAMIL
ஐ.பி.எல். வீரர்களுக்கு தினசரி கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும்: பஞ்சாப் அணியின் உரிமையாளர் வலியுறுத்தல்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவது குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான நெஸ் வாடியா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற களத்திலும், களத்துக்கு வெளியேயும் பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்பான முறையில் பின்பற்றப்பட வேண்டும்.
பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது.
முடிந்த அளவுக்கு அதிக அளவிலும், தினசரியும் கொரோனா மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நான் கிரிக்கெட் வீரராக இருந்தால் தினசரி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அதனால் எந்த தீங்கும் வராது.
உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறை என்பது மிகவும் தீவிரமாக கவனத்தில் கொள்ளக்கூடிய ஒன்றாகும்.
அதனை 8 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். போட்டியில் அமல்படுத்த முடியுமா? என்பது தெரியவில்லை.
இந்த தொடரில் அணிகள் நிலையாக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தலை எதிர்நோக்கி இருக்கிறோம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் அதிகபட்சமாக கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு இருக்கின்றன. அதற்குரிய அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் அவர்களிடம் உள்ளது.
போதுமான பரிசோதனைகள் செய்ய உள்ளூர் அரசாங்கத்தின் உதவி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தேவைப்படும்.
இதற்கு முன்பாக நாம் ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி இருந்தாலும், இந்த முறை நாம் நிறைய நடைமுறைகளை கூடுதலாக பின்பற்ற வேண்டியது இருக்கிறது.
இந்த சீசனில் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் முன்பை விட அதிகமானோர் பார்த்து ரசிக்கும் போட்டியாக ஐ.பி.எல். இருக்கும் என்று நம்புகிறேன்.
அந்த நிலையை எட்டவில்லை என்றால் ஆச்சரியப்படுவேன். அதிகமான பார்வையாளர்களை ஈர்ப்பதன் மூலம் ஸ்பான்சர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும்.
ரசிகர்களுக்கு அனுமதி இல்லாததால் அணிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் ஈடுகட்டும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.