CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
ஐ.பி.எல்.லில் ஆடுவதுதான் ரோகித் சர்மாவுக்கு முக்கியமா?- வெங்சர்க்கார் கேள்வி
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரோகித் சர்மா. இவர் ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.
இந்த ஐ.பி.எல். போட்டியில் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் 4 போட்டிகளில் அவர் ஆடவில்லை.
இதன் காரணமாக இந்திய அணியின் துணை கேப்டனான ரோகித் சர்மா ஆஸ்திரேலிய பயணத்தில் தேர்வு செய்யப்படவில்லை. காயம் சரியாக சில வாரங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா கவனமாக இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கூறி இருந்தனர்.
இதற்கிடையே ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களம் இறங்கினார். இது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது காயம் மேலும் சந்தேகத்தை கிளப்பியது.
இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு இந்திய அணியை விட ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவது தான் முக்கியமா? என்று முன்னாள் கேப்டன் வெங்சர்க்கார் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ரோகித் சர்மா விவகாரம் புதிராக உள்ளது. இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேனான அவர் ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்கும் அளவுக்கு உடல் தகுதியுடன் இல்லை என்று கிரிக்கெட் வாரிய பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல் சான்று அளித்துள்ளார். ஆனால் அடுத்த சில நாட்களில் அவர் மும்பை அணியின் கேப்டனாக களம் இறங்குகிறார்.
ரோகித் சர்மாவுக்கு நாட்டை விட ஐ.பி.எல்.தான் முக்கியமாக தெரிகிறது. இந்திய அணிக்கு ஆடுவதைவிட ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதையே விரும்புகிறார்.
இந்த விஷயத்தில் கிரிக்கெட் வாரியம் தீர்வு காணவேண்டும். ரோகித் சர்மா காயம் குறித்து நிதின் படேல் தவறான தகவல் கொடுத்தாரா? என்பது தெரியவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறும்போது, ‘ஏற்கனவே நடந்தது குறித்து விவாதிக்கவேண்டிய அவசியம் இல்லை. ரோகித் தற்போது உடல் தகுதி பெற்றுள்ளார். ஆஸ்திரேலியா செல்ல உள்ள நிலையில் இந்திய கிரிக்கெட்டுக்கு இது நல்ல விஷயம்’என்றார்.