கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் வருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் ஐ.பி.எல். தொடர் இன்னும் ஒரு வார காலத்தில் தொடங்கவிருக்கும் நிலையிலும், 2 வீரர்கள் உட்பட 13 பேர்
கொரோனா பாதிப்படைந்துள்ளனர் என்றும் பிசிசிஐ கூறியதையடுத்து, தொடரை கைவிட முடியாது, அது கடினம் என்று பாஜக எம்.பி.யும் முன்னாள் இந்திய கிரிக்கெட்வீரருமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு கவுதம் கம்பீர் அளித்த பேட்டியில், கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவைக் கண்டு பயப்படமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.
பயோ-செக்யூர் குமிழிக்குள் வீரர்கள் இருப்பது அவசியம். வழிகாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம். ஒரேயொருவருக்காக தொடரையே தியாகம் செய்ய முடியாது.
எனவே வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் முறையாகக் பின்பற்ற வேண்டும்.
ஐபிஎல் தொடரில் எந்த ஒரு அணியும் எந்த ஒரு அணியையும் வீழ்த்தலாம்.
ஆனால் தொடரில் எப்படி தொடக்கத்தில் ஆடுகிறோம் என்பது தான் முக்கியம்.
மேலும் இந்திய வீரர்கள் 6 மாதகாலமாக கிரிக்கெட் ஆடவில்லை.
அவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்களா இல்லையா என்பது தொடர் தொடங்கியவுடன் தெரிந்து விடும்’ என்றார்.
அதனைதொடர்ந்து யுவராஜ் சிங் மீண்டும் ஆட விருப்பம் தெரிவித்துள்ளார், ஓய்விலிருந்து வெளியே வர முறைப்படி அனுமதி கேட்டு அவர் பிசிசிஐக்கு எழுதியுள்ளது பற்றி கம்பீர் கூறுகையில், அது அவரது சொந்த முடிவு, ஆனால் யுவராஜ் சிங் ஆடினால் எல்லோருமே விரும்பிப் பார்ப்பார்கள்.