14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது. மே 30-ந் தேதி வரை இந்த போட்டி மும்பை, பெங்களூர், கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி ஆகிய நகரங்களில் நடக்கிறது.
ஐ.பி.எல். போட்டிக்காக அனைத்து வீரர்களும் தயாராகி வருகின்றனர். ஐ.பி.எல். தொடர் நடைபெறும் அதே நேரத்தில் சில அணிகள் சர்வதேச போட்டிகளில் விளையாடுகின்றன. இதனால் முன்ணனி வீரர்களில் சிலர் ஐ.பி.எல். போட்டியில் பாதியிலேயே விலக நேரிடும்.
இந்த நிலையில் ஐ.பி.எல். நடைபெறும் போது சர்வதேச போட்டிகள் நடத்த வேண்டாம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
இருநாடுகள் இடையேயான தொடர் நடைபெறுகிறபோது ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் வீரர்களால் ஒன்று இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போகும். அல்லது தாய் நாட்டிற்காக விளையாடுவதை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஐ.பி.எல். கிரிக்கெட் மிகப்பெரிய திருவிழா போன்று நடத்தப்படுகிறது. எனவே ஐ.பி.எல். நடைபெறுகிற காலக்கட்டத்தில் சர்வதேச தொடர்கள் எதையும் நடத்தக்கூடாது என்பதை கிரிக்கெட் வாரியங்கள் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.பி.எல். போட்டியில் 14 இங்கிலாந்து வீரர்கள் விளையாடுகிறார்கள். ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இங்கிலாந்து அணி நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதனால் சில வீரர்கள் ஐ.பி.எல்.லில் விளையாடலாமா? வேண்டாமா? என்று தவித்து வருகிறார்கள்.
ஐ.பி.எல்.லில் விளையாடும் வீரர்களை இங்கிலாந்து அணிக்காக கட்டாயம் ஆட வேண்டும் என்பதை நிர்பந்திக்க மாட்டோம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.