
துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 24வது ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.
அபுதாபியில் உள்ள ஷேக் சையீத் மைதானத்தில் இன்றைய ஆட்டம் நடைபெற்றுகிறது.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் திரிபாதி-ஷுப்மன் கில் களமிறங்கினர்.
பஞ்சாப் பந்துவீச்சாளர் சமி வீசிய பந்தில், ராகுல் திரிபாதி(4 ரன்கள்) பவுல்ட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரானா 2 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி சற்று தடுமாறியது.
மறுமுனையில் நிதானமாக ஆடிய ஷுப்மன் கில் 47 பந்துகளில் 57 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த இயன் மார்கன்(23 ரன்கள்), ரவி பிஷ்னோய் வீசிய பந்தில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார்.
அண்ட்ரே ரசல் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதற்கிடையில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் விளாசி 27 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி தற்போது விளையாடி வருகிறது.