ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்துக்குள் வீரர்கள் இருப்பதால் அவர்களை வெளிநபர்கள் யாரும் எளிதில் சந்திக்க முடியாது.
இந்த நிலையில் ஐ.பி.எல். வீரர் ஒருவரை ஆன்-லைன் மூலம் சூதாட்ட தரகர் அணுகி இருக்கிறார்.
இது குறித்து அந்த வீரர் அளித்த புகாரின் பேரில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆனால் சூதாட்ட தரகர்கள் தொடர்பு கொண்ட வீரர் யார்? என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்திய கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் அஜித் சிங் கூறுகையில் ‘ஐ.பி.எல். வீரரை சூதாட்ட தரகர் அணுகியது உண்மை தான்.
நாங்கள் அவரை கண்காணித்து வருகிறோம். இதற்கு சற்று காலம் பிடிக்கும்’ என்றார்.