8 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அபுதாபி, துபாய், சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.
அபுதாபியில் நேற்றிரவு நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த மும்பை அணி பவுண்டரியுடன் கணக்கை தொடங்கியது.
கேப்டன் ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் (4.5 ஓவர்) சேர்த்து வலுவான தொடக்கம் அமைத்து தந்தனர்.
டி காக் 23 ரன்களில் கேட்ச் ஆனார். சிறிது நேரத்தில் ரோகித் சர்மா (35 ரன், 23 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஸ்ரேயாஸ் கோபாலின் சுழலில் சிக்கினார்.
அதே ஓவரில் இஷான் கிஷனும் (0) ஆட்டம் இழந்தார்.
இதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவுடன், குருணல் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார்.
நிலைத்து நின்று மட்டையை சுழட்டிய சூர்யகுமார் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு துரத்தினார்.
என்றாலும் ரன்வேகம் சற்று மந்தமானது. தடுமாற்றத்துடன் ஆடிய குருணல் பாண்ட்யா 12 ரன்னில் (17 பந்து) வெளியேறினார்.
10-ல் இருந்து 14-வது ஓவருக்குள் மும்பை அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆனால் இறுதி கட்டத்தில் மும்பை பேட்ஸ்மேன்கள் அதிரடியில் வெளுத்து கட்டினர்.
சூர்யகுமாரும், ஹர்திக் பாண்ட்யாவும் தொடுத்த தாக்குதலில் மும்பை அணி 190 ரன்களை கடந்தது.
20 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது.
கடைசி 5 ஓவர்களில் மட்டும் 68 ரன்கள் திரட்டினர்.
ஐ.பி.எல்.-ல் தனது அதிகபட்ச ரன்களை பதிவு செய்த சூர்யகுமார் யாதவ் 79 ரன்களுடனும் (47 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 30 ரன்களுடனும் (19 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.
அதிரடி புயல் பொல்லார்ட்டுக்கு களம் காண வாய்ப்பே கிடைக்கவில்லை.
அவரை முன்கூட்டியே இறக்கியிருந்தால் மும்பை அணி 200 ரன்களை கடந்திருக்கலாம்.
அடுத்து 194 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆடியது.
தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (0) டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் ஆனார்.
அடுத்து இறங்கிய கேப்டன் ஸ்டீவன் சுமித் (6) பும்ராவின் பந்து வீச்சை விளாச முயற்சித்த போது அது பேட்டில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது.
தொடர்ந்து சஞ்சு சாம்சன் (0), லோம்ரோர் (11 ரன்) ஆகியோரும் நடையை கட்டினர்.
இதற்கு மத்தியில் மற்றொரு தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் போராடினார்.
ராகுல் சாஹர், குருணல் பாண்ட்யா ஆகியோரது சுழற்பந்து வீச்சில் 4 சிக்சர்களை பறக்க விட்டார்.
இதனால் ராஜஸ்தானுக்கு லேசான நம்பிக்கை பிறந்தது.
ஸ்கோர் 98 ரன்களை எட்டிய போது ஜோஸ் பட்லர் (70 ரன், 44 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) பேட்டின்சனின் ஓவரில் பந்தை தூக்கியடித்தார்.
அதை எல்லைக்கோடு அருகே பொல்லார்ட் தட்டிவிட்டு சூப்பராக கேட்ச் செய்தார். அத்துடன் ராஜஸ்தானின் வெற்றி வாய்ப்பு சிதைந்தது.
முடிவில் ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 136 ரன்னில் சுருண்டது.
இதனால் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மும்பை தரப்பில் பும்ரா 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஐ.பி.எல்.-ல் அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். டிரென்ட் பவுல்ட், பேட்டின்சன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மும்பை அணிக்கு இது 4-வது வெற்றியாகும்.
இதன் மூலம் மறுபடியும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வியாகும்.