TAMIL

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுமா? – இந்திய கிரிக்கெட் வாரியம் நாளை மறுநாள் ஆலோசனை

8 அணிகள் இடையிலான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிமார்ச் 29-ந் தேதி முதல் மே 24-ந் தேதி வரை நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முதலில் அறிவித்து இருந்தது.

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் தடம் பதித்ததை தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் அணிகளின் நிர்வாகிகளுடன் கலந்து



ஆலோசித்த இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டியை ஏப்ரல் 15-ந் தேதி வரை தள்ளிவைப்பதாக தெரிவித்தது.

கொரோனா பரவாமல் தடுக்க இந்தியாவில் எந்தவொரு விளையாட்டு போட்டியும், வீரர்கள் தேர்வுக்கான போட்டிகளையும் ஏப்ரல் 15-ந் தேதி வரை நடத்தக்கூடாது என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இந்த காலக்கட்டம் வரை வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதையும் இந்திய வெளியுறவு அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா உள்பட வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

கொரோனா வைரசின் கோரதாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்க இருந்த கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் இருக்கின்றன.



கொரோனா அச்சத்தால் இந்திய கிரிக்கெட் வாரியம் மும்பையில் உள்ள தனது தலைமை அலுவலகத்தை கடந்த 17-ந் தேதி மூடிவிட்டது.

ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே தங்கள் பணிகளை கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகம் மூடப்பட்டு விட்டதாலும், ஓட்டல்களில் கூட்டங்கள் நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாலும், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் நாளை மறுநாள் (24-ந் தேதி), ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்களுடன் டெலிகான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துகிறார்கள்.

இதில் இந்த இக்கட்டான தருணத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தலாமா? தள்ளி வைக்கலாமா? அல்லது ரத்து செய்யலாமா? என்பது குறித்து முடிவு செய்யப்பட இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker