13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 29-ந்தேதி மும்பையில் தொடங்கி நடக்க இருந்தது.
ஆனால் இந்தியாவில் கொரோனா வைரசின் பரவலும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்ததால் ஐ.பி.எல். போட்டி சில மாதங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு நிலைமை கட்டுக்குள் வராததால் வேறு வழியின்றி இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
அங்குள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை இந்த போட்டி அரங்கேறுகிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் அமீரகம் சென்று பயிற்சியை தொடங்கி விட்ட நிலையிலும், போட்டி அட்டவணையை வெளியிடுவதில் இழுபறி நீடித்தது.
அபுதாபியில் கடைபிடிக்கப்படும் கடுமையான கொரோனா தடுப்பு தனிமைப்படுத்துதல் நடைமுறை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2 வீரர்கள் உள்பட 13 பேர் கொரோனாவில் சிக்கியது, முன்னணி வெளிநாட்டு வீரர்கள் கடைசி நேரத்தில் வருகை தர இருப்பது போன்றவற்றை கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்ற வகையில் போட்டி அட்டவணையை மாற்றுவதற்கு வசதியாக காலதாமதம் செய்வதாக கூறப்பட்டது.
இருப்பினும் இழுத்தடிக்காமல் யார்-யார் எப்போது மோதுவது என்ற விவரத்தை உடனடியாக வெளியிடும்படி அணிகளின் நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 13-வது ஐ.பி.எல். திருவிழாவுக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று மாலை அதிகாரபூர்வமாக வெளியிட்டது.
இதன்படி 19-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சும், முன்னாள் சாம்பியன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த ஆட்டம் அபுதாபியில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
வழக்கமாக மாலை நேர ஆட்டம் 4 மணிக்கும், இரவு நேர ஆட்டம் 8 மணிக்கும் ஆரம்பிக்கும். இந்த முறை அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்கும் வகையில் போட்டி அட்டவணை அமைந்துள்ளது. மொத்தம் 10 நாட்களில் இரட்டை லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. லீக் சுற்றை பொறுத்தவரை துபாயில் 24 ஆட்டங்களும், அபுதாபியில் 20 ஆட்டங்களும், சார்ஜாவில் 12 ஆட்டங்களும் இடம்பெறுகின்றன. பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டி நடக்கும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.