13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் நேற்றிரவு சார்ஜாவில் அரங்கேறிய 23-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கோதாவில் குதித்தன.
டெல்லி அணியில் மாற்றம் ஏதுமில்லை.
ராஜஸ்தான் அணியில் அங்கித் ராஜ்புத், டாம் கர்ரன் நீக்கப்பட்டு வருண் ஆரோன், ஆன்ட்ரூ டை சேர்க்கப்பட்டனர்.
‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி ஷிகர் தவானும், பிரித்வி ஷாவும் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.
இந்த முறை டெல்லிக்கு திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை.
தவான் (5 ரன்), வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.
பிரித்வி ஷாவும் (19 ரன்) ஆர்ச்சரின் பந்து வீச்சுக்கே இரையானார்.
அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (22 ரன்), ரிஷாப் பண்ட் (5 ரன்) ரன்-அவுட் ஆக, 79 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.
இதைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டோனிசும், ஹெட்மயரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் ஸ்கோரையும் வெகுவாக உயர்த்தினர்.
ஸ்டோனிஸ் தனது பங்குக்கு 39 ரன்கள் (30 பந்து, 4 சிக்சர்) எடுத்தார்.
இளம் பவுலர் கார்த்திக் தியாகி மற்றும் ஆன்ட்ரூ டையின் ஓவர்களில் சிக்சர்களை கிளப்பிய ஹெட்மயர் 45 ரன்களில் (24 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் ஹர்ஷல் பட்டேல் (16 ரன்), அக்ஷர் பட்டேல் (17 ரன், 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அணி 180 ரன்களை கடப்பதற்கு உதவினர்.
20 ஓவர் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது.
கடைசி 7 பந்தில் டெல்லி அணி 2 விக்கெட்டை இழந்து 3 ரன் மட்டுமே எடுத்தது.
இல்லாவிட்டால் 190 ரன்களை தாண்டியிருக்கும்.
ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், கார்த்திக் தியாகி, ஆன்ட்ரூ டை, திவேதியா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 185 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் (13 ரன்) அஸ்வின் சுழலில் சிக்கி ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த ஸ்டீவன் சுமித் (24 ரன், 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), நோர்டியாவின் ஓவரில் லெக்சைடில் தட்டிவிட்ட பந்தை ஹெட்மயர் பாய்ந்து விழுந்து பிடித்து அசத்தினார்.
சஞ்சு சாம்சனும் (5 ரன்) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப ராஜஸ்தானின் ஆரவாரம் அடங்கியது.
மறுமுனையில் பொறுமையாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 34 ரன்களில் (36 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) போல்டு ஆனார். இதன் பின்னர் ராஜஸ்தான் அணி முழுமையாக நிலைகுலைந்தது.
பின்வரிசையில் ராகுல் திவேதியா (38 ரன், 29 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார்.
ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 138 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டெல்லி தரப்பில் ரபடா 3 விக்கெட்டும், அஸ்வின், ஸ்டோனிஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
6-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி 5-வது வெற்றியை பெற்றதுடன் பட்டியலிலும் 10 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.
அதே சமயம் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி கண்ட ராஜஸ்தான் தொடர்ச்சியாக சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும்.