TAMIL

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்கள்; வார்னர் சொல்கிறார்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை திட்டமிட்டபடி நடத்த வாய்ப்பில்லை என்றால் அந்த காலக்கட்டத்தில் (அக்டோபர், நவம்பர்) அதற்கு பதிலாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டால் நிச்சயம் எங்களால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியும்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை தள்ளிவைப்பது குறித்து பல்வேறு விதங்களில் பேச்சுகள் நடக்கிறது.

உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு அணியையும் (மொத்தம் 16 அணிகள்) ஆஸ்திரேலியாவுக்கு ஒருசேர அழைத்து வந்து பிறகு அவர்களை 14 நாட்களை தனிமைப்படுத்துவது என்பதெல்லாம் மிகவும் சவாலான விஷயம்.

அது மட்டுமின்றி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆஸ்திரேலியாவில் தற்போது பயணக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்த விதிமுறைகளை நாம் பின்பற்றியாக வேண்டும்.

எனவே உலக கோப்பை குறித்து ஐ.சி.சி. எடுக்கும் முடிவுக்காக காத்திருக்கிறோம்.

ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் ஐ.பி.எல். போட்டியில் விளையாட ஆர்வமுடன் உள்ளனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதித்தால் போதும்.

எல்லா வீரர்களும் ஐ.பி.எல். போட்டிக்கு கிளம்பி விடுவார்கள்.

இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி எங்கள் நாட்டிற்கு வந்து 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடரின் போது நாங்கள் இந்திய கேப்டன் விராட் கோலியை வேண்டுமென்றே கோபமூட்டும் செயலில் ஈடுபடமாட்டோம்.

தேவையில்லாமல் அவரை சீண்டினால் அது இன்னும் அவரை சிறப்பாக செயல்பட தூண்டும் என்பதை அறிவோம்.

ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் இந்திய அணியை எதிர்த்து விளையாடினால் அது புதுமையான அனுபவமாக இருக்கும்.

ஆஸ்திரேலிய அணியில் தேர்வு செய்யப்பட்டு இந்த தொடரில் களம் காண வேண்டும் என்று விரும்புகிறேன்.

கடந்த முறை நாங்கள் அப்படி ஒன்றும் மோசமாக விளையாடிவிடவில்லை. சிறந்த அணியால் (இந்திய அணி) தோற்கடிக்கப்பட்டோம். அவர்களது பந்து வீச்சு அபாரமாக இருந்தது. தற்போது இந்திய அணி சிறப்பான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறது. அதே சமயம் எங்களது பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தாக்குதல் தொடுக்க தீவிரம் காட்டுவார்கள். இதை காண இந்திய ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள்.

இவ்வாறு வார்னர் கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker