ஜ.பி.எல் கிரிக்கெட் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் அபுதாபியில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை. யூகங்களுக்கு விடைகொடுக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
ரசிகர்களை போல் டோனியின் ஆட்டத்தை காண இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக்கும் ஆவல் கொண்டுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷேவாக் கூறுகையில், ‘இந்த ஐ.பி.எல். தொடர் ஒவ்வொருவருக்கும் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று கருதுகிறேன்.
வீரர்களும், ரசிகர்களும் டோனி மீண்டும் களம் திரும்புவதை பார்க்க இருக்கிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் இது மகிழ்ச்சியாக இருக்கும்.
ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தபடி பழைய ஆட்டங்களின் வீடியோ காட்சிகளை பார்த்து ஆராய்ந்தேன். இதில் எனது இன்னிங்சும் அடங்கும்.
இந்தியர்களாகிய நமது வாழ்க்கையில் கிரிக்கெட்டும் ஒரு பகுதியாகி விட்டது. மீண்டும் கிரிக்கெட் போட்டியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்’ என்றார்.