TAMIL
ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்களுடன் நடக்க இருந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை கூட்டம் ரத்து
8 அணிகள் இடையிலான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந் தேதி மும்பையில் தொடங்க இருந்தது. கொரோனா அச்சம் காரணமாக இந்த போட்டி ஏப்ரல் 15-ந் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருவதாலும், வெளிநாட்டு வீரர்கள் வரமுடியாத அளவுக்கு விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாலும் இந்த தடவை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
ஐ.பி.எல். போட்டி விஷயத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்களுடன் நேற்று டெலிகான்பரன்ஸ் மூலம் ஆலோசிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த டெலிகான்பரன்ஸ் ஆலோசனை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா கூறுகையில், ‘மனித உயிர்களே முக்கியம். மற்ற எல்லாமே இரண்டாம்பட்சம் தான்.
கொரோனா தாக்கம் அதிகமாகி உள்ளதே தவிர, நிலைமையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அதனால் ஐ.பி.எல். குறித்து பேசுவதற்கு கூட எதுவும் இல்லை.
ஒருவேளை ஐ.பி.எல். கிரிக்கெட் நடக்காவிட்டாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்’ என்றார்.
மற்றொரு அணியின் நிர்வாகி கூறுகையில், ‘தற்போதைய சூழலில் ஐ.பி.எல். விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு எதுவும் இல்லை.
ஒட்டுமொத்த தேசமும் முடங்கி போய் இருக்கிறது. ஐ.பி.எல். போட்டியை விட கொரோனாவை சமாளிப்பது தான் மிகவும் முக்கியம்’ என்று குறிப்பிட்டார்.
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளிப்போகும் பட்சத்தில் அவற்றுடன் ஒப்பிடும் போது ஐ.பி.எல். கிரிக்கெட் எல்லாம் சின்ன விஷயம் தான்.
அதன் பிறகு ஐ.பி.எல். போட்டியை நடத்துவது என்பது மேலும் கடினமாகி விடும்.
அதுமட்டுமின்றி தற்போதைய தருணத்தில் வெளிநாட்டினருக்கு விசா வழங்குவது குறித்து மத்திய அரசு சிந்திக்கக்கூட செய்யாது’ என்றார்.