TAMIL
‘ஐ.சி.சி.யின் புதிய வழிகாட்டுதல் படி கிரிக்கெட் போட்டியை நடத்துவது கடினம்’ – டிராவிட் கருத்து
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 13-ந் தேதிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை.
இதனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
கொரோனா தாக்கம் குறைந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை தொடங்கும் போது களத்தில் வீரர்களும், நடுவர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
பந்து மீது எச்சிலை தேய்க்கக்கூடாது.
கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய போட்டி தொடருக்கு முன்பாக வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்
என்பது உள்பட பல்வேறு புதிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவுறுத்தி இருக்கிறது.
இதற்கிடையே, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜூலை மாதத்தில் தங்களது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி, இங்கிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இதனை அடுத்து பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு பயணம் செய்து டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு சூழ்நிலைக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது என்பது
நம்பத்தகுந்த விஷயமாக இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்போதைய சூழ்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது போட்டி தொடரை தொடங்க போவதாக பேசுவது சற்று நம்பத்தகுந்த விஷயமாக இல்லை.
அவர்களுக்கு வேறு எந்த கிரிக்கெட் போட்டியும் இல்லாததால் இந்த போட்டி தொடரை நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறப்பாக கையாளும் திறமை அவர்களுக்கு இருக்கலாம்.
ஆனால் போட்டி அட்டவணை நெருக்கடிக்கு மத்தியில் இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றி மற்ற நாடுகளும் போட்டியை நடத்துவது என்பது முடியாத காரியம்.
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு இந்த நிலைமை மாறும் என்று நம்புகிறோம்.
போட்டி தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை எல்லாம் முடித்து தனிமைப்படுத்திய பிறகும் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் ஒரு வீரருக்கு கொரோனா தொற்றின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அடுத்து என்ன நடக்கும்.
தற்போதைய விதிமுறையின் படி பார்த்தால் பொது சுகாதாரத்துறையினர் வந்து அனைத்து வீரர்களையும் தனிமைப்படுத்துவார்கள். அத்துடன் அந்த டெஸ்ட் போட்டி பாதியில் ரத்தாகும்.
இதனால் அந்த தொடரை நடத்த எடுத்த அனைத்து ஏற்பாடுகளும் வீணாகும்.
போட்டியின் போது ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் ஒட்டுமொத்த போட்டியையும் ரத்து செய்யாமல் இருப்பதற்கான வழிமுறையை சுகாதாரத்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறையினருடன் இணைந்து நாம் கண்டறிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.