
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாதத்திற்குமான சிறந்த வீரா்/வீராங்கனையை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரா், வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
அந்த வகையில் ஜனவரி மாதத்தின் சிறந்த வீரராக இந்திய அணியைச் சேர்ந்த ரிஷப் பந்த் தேர்வானார். பிப்ரவரி மாத விருது இந்திய பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 3வது முறையாக மீண்டும் இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆறு ஒருநாள், 4 டி20 விக்கெட்டுகளும் எடுத்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் சிறப்பாகப் பங்களித்ததற்காக இந்த விருதுக்கு அவர் தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.