TAMIL

ஐ.சி.சி. போட்டிகளில் வெற்றி பெற மிடில் வரிசை வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் – கேப்டன் விராட்கோலி பேட்டி

இலங்கைக்கு எதிராக இன்று நடைபெறும் முதலாவது 20 ஓவர் போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி கவுகாத்தியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போட்டிகளில் நமது அணி வெற்றி பெற வேண்டும் என்றால் நெருக்கடியான சூழ்நிலையிலும் 6-வது, 7-வது வரிசையில் களம் காணும் வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.

பேட்டிங் வரிசையில் இரண்டு அல்லது மூன்று வீரர்களை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது.



வரும் சில தொடர்களில் ரோகித் சர்மா, நான் (விராட்கோலி), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான் ஆகியோர் சோபிக்காமல் போனால்

ஏற்படும் நெருக்கடியான தருணத்தில் எந்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்.

20 ஓவர் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் வலுவான லெவன் அணியை முதலில் உருவாக்க வேண்டும்.

அத்துடன் மாற்று வீரர்களையும் அடையாளம் காண வேண்டியது அவசியமானதாகும்.

ரோகித் சர்மா ஓய்வுக்கு பிறகு களம் திரும்புகையில் தொடக்க வீரராக அவருடன் யாரை இறக்குவது என்பதை முடிவு செய்வது கடினமானதாக இருக்கும்.

லோகேஷ் ராகுல் தொடக்க வரிசையில் நன்றாக விளையாடி வருகிறார். சிறந்த ஆடும் லெவன் அணி களம் இறக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்த தரமான ஆட்டத்தை தொடர வேண்டும் என்று விரும்புகிறோம்.

வீரர்கள் அணியின் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தங்களது தனிப்பட்ட ஆட்டம் குறித்து அதிகம் சிந்திக்கக்கூடாது. அணியின் நலனின் கவனம் செலுத்தும்பட்சத்தில் சொந்த ஆட்டமும் சிறப்பாக அமையும்.

தேசிய குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து கேட்கிறீர்கள்.



அது குறித்து எனக்கு முழுமையான அம்சம் தெரியாது.

எனவே அது பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. டெஸ்ட் போட்டியை 5 நாட்களில் இருந்து 4 நாள் ஆட்டமாக குறைக்கக்கூடாது. இவ்வாறு விராட்கோலி கூறினார்.

இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா நேற்று அளித்த பேட்டியில், ‘டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து நான் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டேன்.

இலங்கை கிரிக்கெட் வாரியம் எனது தேவை போதும் என்று தெரிவித்தால், 20 ஓவர் போட்டியில் இருந்தும் மகிழ்ச்சியுடன் ஓய்வு பெறுவேன்.

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இலங்கை அணி நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்பதே எனது இலக்காகும்.

நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டால் அதன் பிறகு எந்த நேரத்திலும் ஓய்வு பெற நான் தயார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா துல்லியமாக பந்து வீசக்கூடியவர்.



காயம் காரணமாக கடந்த 4 மாதமாக அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை.

எனவே நல்ல பார்முக்கு திரும்ப அவருக்கு சில போட்டிகள் தேவைப்படும். அந்த அனுகூலத்தை நாங்கள் பயன்படுத்தி கொள்ள விரும்புகிறோம்.

அவரது பந்து வீச்சு நுணுக்கம் குறித்து எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு எல்லா தகவல்களையும் தெரிவித்து விட்டேன்.

பேட்ஸ்மேன்கள் அவரை கவனமாக கையாள்வார்கள் என்று நினைக்கிறேன்.

20 ஓவர் போட்டி கணிக்க முடியாததாகும். எனவே இந்த போட்டியில் எந்த அணி சிறந்தது என்று சொல்ல முடியாது.

ஒரு ஓவரில் கூட ஆட்டத்தின் உத்வேகத்தை ஒருவரால் மாற்ற முடியும்.

20 ஓவர் போட்டியில் நல்ல சூழ்நிலையை பேட்ஸ்மேன்கள் அமைத்து கொடுத்தால் பந்து வீச்சாளர்களால் வெற்றி தேடிக்கொடுக்க முடியும்’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker