TAMIL
ஐ.சி.சி. தரவரிசை பட்டியல் ஒரு குப்பை; இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகன் சாடல்
டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 ஆகிய கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.
இதில் டெஸ்ட் போட்டியில் இந்தியா 120 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
112 புள்ளிகளுடன் நியூசிலாந்து 2வது இடத்திலும், 102 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிக்கா 3வது இடத்திலும் உள்ளது.
அதே 102 புள்ளிகளுடன் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முறையே 4 மற்றும் 5 ஆகிய இடங்களை பிடித்து உள்ளது.
இதுபற்றி இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும்பொழுது, கடந்த 2 வருடங்களாக நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் சிறப்புடன் விளையாடவில்லை.
ஆனால், ஐ.சி.சி. வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் அந்த அணிகள் 2 மற்றும் 4வது இடத்தில் உள்ளது.
ஐ.சி.சி. தரவரிசை பட்டியல் பற்றி நேர்மையாக கூறுவதென்றால், அது முற்றிலும் ஒரு குப்பை என கூறியுள்ளார்.
கடந்த இரு வருடங்களில் நியூசிலாந்து பல தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் 2வது இடம் எப்படி வழங்கப்பட்டது என எனக்கு தெரியவில்லை.
கடந்த 3 அல்லது 4 வருடங்களாக டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, குறிப்பிடும்படியாக வெளிநாடுகளில் வெற்றி பெற போராடி வந்துள்ளது.
சொந்த மண்ணில் அவர்கள் (இங்கிலாந்து) தொடரை கைப்பற்றினர். ஆஷஸ் போட்டியில் தொடரை சமன் செய்தனர். அயர்லாந்து அணி ஒன்றையே அவர்கள் வீழ்த்தியுள்ளனர்.
இந்த தரவரிசை பட்டியல் சிறிது குழப்பம் அளிக்கிறது.
உலகில் சிறந்த 2வது டெஸ்ட் அணியாக நியூசிலாந்து இல்லை என்பது எனது அபிப்ராயம் என கூறியுள்ளார்.
அதேவேளையில் ஆஸ்திரேலிய அணியை (5வது இடத்தில் உள்ளது) அவர் புகழ்ந்து கூறியுள்ளார். அந்த அணி தரவரிசையில் சரியான இடத்தில் இல்லை என கூறியுள்ளார்.
கேள்வியே இல்லாமல் உலகின் சிறந்த டெஸ்ட் அணிகளாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளன.
ஆஸ்திரேலியாவுடன் போட்டி போட கூடிய ஒரே அணி இந்தியா என நான் நினைக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.