FOOTBALLLATEST UPDATESLEAGUESNEWSTAMIL
ஐ.எஸ்.எல். கால்பந்து : முதலாவது அரைஇறுதியில் கோவா-மும்பை இன்று மோதல்
கோவாவில் நடந்து வரும் 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதன் லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை சிட்டி, ஏ.டி.கே.மோகன் பகான், நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறின. முன்னாள் சாம்பியன்கள் சென்னையின் எப்.சி., பெங்களூரு உள்பட 7 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.
இன்று நடைபெறும் அரைஇறுதியின் முதலாவது சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த மும்பை சிட்டி (12 வெற்றி, 4 டிரா, 4 தோல்வி), 4-வது இடம் பெற்ற கோவா (7 வெற்றி, 10 டிரா, 3 தோல்வி) அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் வருகிற 8-ந் தேதி மீண்டும் ஒருமுறை அரைஇறுதியில் மோதும். இரண்டு ஆட்டங்களிலும் சேர்த்து அதிக வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். சமநிலை ஏற்பட்டால் கோல் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
ஐ.எஸ்.எல். வரலாற்றில் இரு அணிகளும் 16 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 7-ல் கோவாவும், 5-ல் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன. 4 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. அரைஇறுதியை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.