TAMIL
ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணி 4-வது வெற்றி
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த 40-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. அணியை எதிர்கொண்டது.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டம் நடந்து வருவதால் இந்த போட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நடந்தது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்து பெங்களூரு அணியின் கட்டுப்பாட்டில் அதிக நேரம் வலம் வந்தது. இருப்பினும் முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
68-வது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி அந்த அணி வீரர் சுனில் சேத்ரி கோல் அடித்தார்.
81-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் ஆல்பர்ட் ஷெரன் மற்றொரு கோல் போட்டார்.
முடிவில் பெங்களூரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தியது. 9-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி 4-வது வெற்றியை ருசித்ததுடன், புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.