FOOTBALLLATEST UPDATESNEWSTAMIL
ஐ.எஸ்.எல். கால்பந்து : கோவா – பெங்களூரு ஆட்டம் ‘டிரா’
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. இதல் பங்கேற்றுள்ள 11 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் நேற்றிரவு அரங்கேறிய 3-வது லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான எப்.சி.கோவா, முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.யை எதிர்கொண்டது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டியதால் ஆட்டம் விறுவிறுப்பாக நகர்ந்தது. இருப்பினும் கோல் அதிர்ஷ்டம் முதலில் பெங்களூரு அணிக்கே கிட்டியது.
27-வது நிமிடத்தில் கிளைடான் சில்வா தலையால் முட்டி கோல் அடித்தார். 57-வது நிமிடத்தில் மற்றொரு பெங்களூரு வீரர் ஜூவானன் பந்தை வலைக்குள் தள்ளினார். 2-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி முன்னிலை கண்டதால் எளிதில் வெற்றி பெற்று விடும் என்றே நினைக்கத் தோன்றியது. ஆனால் அதன் பிறகு வேகத்தை தீவிரப்படுத்திய கோவா அணி 66 மற்றும் 69-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் போட்டு அசத்தியது. இரண்டு கோல்களையும் இகோர் அங்குலோ அடித்தார். தொடர்ந்து வெற்றிக்குரிய கோல் அடிக்க இரு அணி வீரர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் இல்லை. முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது. இந்த சீசனில் ‘டிரா’ ஆன முதல் ஆட்டம் இதுவாகும். இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் ஒடிசா-ஐதராபாத அணிகள் மோதுகின்றன.