ஐபிஎல் 2020 சீசன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. ஆனால் 2021 சீசன் இந்தியாவில்தான் நடைபெறும். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் தினந்தோறும் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால் போட்டி சிரமமின்றி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் உற்சாகத்தில் இருந்தது.
ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவில் மின்னல் வேகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகமாக உள்ளது.
இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மகாராஷ்டிராவில் 30 ஆயிரத்தை நெருங்கிய வண்ணமும், அதைவிட கூடிய வண்ணமும் உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் எப்போது வேண்டுமென்றாலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற செய்தி வந்த வண்ணம் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலதத்தில் முதலில் மும்பை நகரம்தான் அதற்கு உள்ளே வரும். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் வான்கடே மைதானத்தில் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்படும்.
மேலும், மும்பையை போன்று ஆறு நகரங்களில் வேறு ஏதாவது ஒன்றிற்கும் ஏற்பட்டால் மிகப்பெரிய சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் ஐதராபாத் கிரிக்கெட் மைதானத்தை மாற்று மைதானமாக வைத்துக்கொள்ள ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.