
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டி20 சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. வழக்கமாக போட்டி தொடங்குவதற்கு மிகவும் முன்னதாகவே அட்டவணை வெளியிடப்படும்.
ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபு தாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் போட்டி நடைபெற இருப்பதால் கொரோன வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கும் நிலையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வீரர்கள் தங்குதடையின்றி சென்று வர ஒப்புதல் வாங்க வேண்டியிருந்தது.
சில தினங்களுக்கு முன்புதான் அதற்கான அனுமதி கிடைத்தது. இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவர்கள் சிலருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான போட்டியை எப்போது வைத்துக் கொள்வது என்ற நெருக்கடியும் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான போட்டி கால அட்டவணை நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் விதிமுறைப்படி நடப்பு சாம்பியனும், 2-ம் இடம் பிடித்த அணியும் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் விளையாட வேண்டும்.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், கொரோனா போன்ற காரணங்களால் முதல் ஆட்டத்தில் மாற்றம் ஏற்படலாம் என கருத்துக்கள் நிலவி வருகிறது.
இதற்கிடையில், ஐபிஎல் போட்டி அட்டவணை தொடர்பாக பல நாட்களாக நிலவி வந்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.