TAMIL
ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டால் 4,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்…..நிதி குறித்து பேசியது பிசிசிஐ
ஐபிஎல் 2020 சீசன் ரத்து செய்யப்பட்டால் இந்தியா கிரிக்கெட் வாரியத்திற்கு 3994.64 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என பிசிசிஐ பொருளாளர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ-யால் நடத்தப்படும் ஐபிஎல் 13-வது சீசன் கடந்த மார்ச் மாதம் 29-ந் திகதி நடைபெற இருந்தது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊடரங்கு பிறப்பித்ததால் மறு அறிவிப்பு வரும் வரை ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
இந்நிலையில் பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் “பிசிசிஐ மிகப்பெரிய வருவாய் இழப்பை எதிர்நோக்கி இருக்கிறது, இந்த வருடம் ஐபிஎல் போட்டிக்கான நேரம் கிடைக்குமா? என்பது எங்களால் உறுதியாக சொல்ல முடியாது. எத்தனை போட்டிகளை இழக்கிறோம் என்பதை பொறுத்துதான் சரியான தொகையை கூற முடியும்
ஒருவேளை ஐபிஎல் போட்டி நடைபெறாவிடில், 3994.64 கோடி ரூபாய் இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பிராண்ட் மதிப்பு மூலம் 6.7 பில்லியன் டொலர் வருவாயும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மூலம் 220 மில்லியன் டொலர் கிடைக்கும் என திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.