நடப்பு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருபவர் மேக்ஸ்வெல்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போனவர். அதேபோல், சுழற்பந்து வீச்சிலும் கலக்க கூடியவர்.
இதனால், மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுக்க எப்போது கடும் போட்டி இருக்கும். இதனால், அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படக்கூடிய வீரர்களில் ஒருவராக மேக்ஸ்வெல் திகழ்கிறார்.
ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடும் மேக்ஸ்வெல், இதுவரை ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் படி ஆடவில்லை.
கடந்த 6 போட்டிகளில் 1, 5, 13, 11, 11* மற்றும் 7 ஆகிய என சொற்ப ரன்களே எடுத்துள்ளார். இதனால், மேக்ஸ்வெல் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரும் ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிக்காக விளையாடியவருமான சேவாக், மேக்ஸ்வெல் ஆட்டத்தை பற்றி கூறுகையில், “ ஒவ்வொரு ஆண்டும் இதேபோல மோசமான ஆட்டத்தையே மேக்ஸ்வெல் வெளிப்படுத்துகிறார்.
ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்படுகிறார்.
ஆனால், அவரது ஆட்டம் ஒரே மாதிரியாகவே உள்ளது.
எனினும், அணிகள் அவர் பின்னால் ஓடுகின்றன. இதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
அடுத்த ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் மேக்ஸ்வெல் 1 முதல் 2 கோடி தொகைக்கே எடுக்கப்படுவார் என நினைக்கிறேன்.
கடந்த 2016- ஆம் ஆண்டு ஐபில் தொடருக்கு பிறகு மேக்ஸ்வெல் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்” என்றார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி படுதோல்வியை சந்தித்து வருகிறது. 6 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றிருக்கிறது. முதல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக சூப்பர் ஓவர் வரை சென்று பஞ்சாப் தோற்றது. பின்னர் 2வது போட்டியில் பெங்களூர் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளிடம் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துள்ளது.