ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும்போதெல்லாம், இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கும். இதற்கு காரணம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றதும், விராட் கோலி ஒரு முறை கூட வென்றதில்லை என்பதும்தான்.
இதற்காக இந்திய அணி கேப்டன் விராட் கோலியை மாற்ற முடியாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சரண்தீப் சிங் கூறுகையில் ‘‘கேப்டன் சிறப்பாக விளையாடாத நேரத்தில்தான் கேப்டன் பதவியை பிரித்து வழங்க வேண்டியது தேவையானது. ஆனால், விராட் கோலி மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார். ஒரு வடிவிலான போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றாலும், அவர்மீது நெருக்கடி கொடுத்து, கேப்டன் பதவியை மற்றொருவரிடம் வழங்கலாம்.
விராட் கோலி ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை என்பதற்காக, இந்திய அணி கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்க முடியாது. அவர் சிறந்த கட்டுக்கோப்பான வீரர் மற்றும் கேப்டன். அவர் இல்லாத நேரத்தில் ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்துகிறார். ஆனால், விராட் கோலியை மாற்றுவதற்கான எந்த காரணமும் இல்லை’’ என்றார்.