TAMIL
ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அசாருதீன் தேர்வு
ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதன் முடிவுகள் மாலையில் அறிவிக்கப்பட்டன.
தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், பிரகாஷ் சந்த் ஜெயின், கே.திலிப் குமார் ஆகியோர் போட்டியிட்டனர். பதிவான 223 வாக்குகளில் அசாருதீன் 147 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். பிரகாஷ் சந்த் ஜெயினுக்கு 73 ஓட்டுகளும், திலிப்புக்கு 3 ஓட்டுகளும் கிடைத்தன.
இதே போல் எல்லா பதவிகளுக்கும் போட்டி இருந்தது. துணைத்தலைவர் பதவிக்கு நின்ற ஜான் மனோஜ் 136-87 என்ற ஓட்டு கணக்கில் தல்ஜீத் சிங்கையும், செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஜய் ஆனந்த் 137-62 என்ற ஓட்டு கணக்கில் வெங்கடேஷ்வரனையும், பொருளாளர் பதவிக்கு நின்ற சுரேந்தர் அகர்வால் 141-60 என்ற ஓட்டு கணக்கில் ஹனுமந்த் ரெட்டியையும், இணைச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நரேஷ்ஷர்மா 130-82 என்ற ஓட்டு கணக்கில் ஷிவாஜி யாதவையும் தோற்கடித்தனர். தேர்தலில் அசாருதீனின் ஆதரவாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றிருப்பதால் ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் அசாருதீனின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக வலம் வந்த 56 வயதான அசாருதீன் 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 22 சதங்கள் உள்பட 6,216 ரன்களும், 334 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 7 சதம், 58 அரைசதம் உள்பட 9,378 ரன்களும் குவித்துள்ளார். 1992, 1996, 1999-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகளில் அவரது தலைமையிலேயே இந்திய அணி பங்கேற்றது.
2000-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது அவர் மீது சூதாட்ட சர்ச்சை வெடித்தது. பணம் பெற்றுக்கொண்டு ‘மேட்ச் பிக்சிங்’கில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அத்துடன் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இதையடுத்து அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்தது.
இதன் பின்னர் அரசியலில் குதித்த அசாருதீன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2009-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் வாரியம் விதித்த வாழ்நாள் தடையை எதிர்த்து ஆந்திர ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த ஐகோர்ட்டு, அவருக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று கூறி அவரை விடுவித்தது.
பல சர்ச்சைகளில் சிக்கிய அசாருதீன் இப்போது விளையாட்டில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்குகிறார்.