TAMIL
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ந்தேதி தொடக்கம்: அதிகாரபூர்வ தகவல்
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட்
போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வேறு வழியின்றி இந்த முறை ஐ.பி.எல். திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தள்ளிபோய் விட்டதால் அந்த கால இடைவெளி ஐ.பி.எல். போட்டிக்கு பயன்படுத்தப்படுகிறது.
முதலில் செப்டம்பர் 26-ந்தேதி ஐ.பி.எல். போட்டியை தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியை செப்டம்பர் 19-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்கி நவம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை
நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
மேலும் பிரிஜேஷ் பட்டேல் கூறும் போது ‘இது 51 நாட்கள் அரங்கேறும் ஐ.பி.எல். போட்டி. இவற்றில் 12 நாட்களில் இரண்டு ஆட்டங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
போட்டிக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உருவாக்கி வருகிறோம்.
அது அடுத்த சில நாட்களில் தயாராகி விடும். ஸ்டேடியத்திற்குள் ரசிகர்களை அனுமதிப்பதா? இல்லையா? என்பது ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் முடிவை பொறுத்தது.
எது எப்படி என்றாலும் சமூக இடைவெளியை எப்போதும் பின்பற்றுவது முக்கியம்’ என்றார்.
ஐ.பி.எல். முடிந்ததும் இந்திய கிரிகெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் அடியெடுத்து வைத்ததும் அங்கு அந்த நாட்டு விதிமுறைப்படி 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டி உள்ளது.
இதை கருத்தில் கொண்டே ஐ.பி.எல். போட்டி ஏற்கனவே திட்டமிட்டதை விட ஒரு வாரத்துக்கு முன்பாக ஆரம்பிக்க உள்ளது.
ஆனால் துபாயில் இது போன்ற சிக்கல் இல்லை.
தற்போதைய துபாய் பாதுகாப்பு நடைமுறைப்படி கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ மருத்துவ அறிக்கை இருந்தால் போதும்.
அங்கு தனிமையில் இருக்க வேண்டிய தேவை இல்லை.
‘நெகட்டிவ்’ அறிக்கை இல்லை என்றால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
கொரோனா அச்சத்தால் வீரர்கள் பெரும்பாலும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
ஒவ்வொரு அணி வீரர்களுக்கும் குறைந்தது ஒரு மாத காலம் பயிற்சி தேவைப்படுகிறது.
ஐ.பி.எல். போட்டிக்கு ஆயத்தமாக உள்ள அனைத்து வீரர்களும் ஆகஸ்டு 20-ந்தேதிக்குள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துபாயில் ஐ.சி.சி. அகாடமிக்கு இரண்டு மைதானங்கள் உள்ளன.
அத்துடன் 38 ஆடுகளங்கள், 6 உள்ளரங்க ஆடுகளங்கள், 5,700 சதுரஅடி விசாலமான வெளிப்புற பகுதியுடன் பிசியோதெரபி மற்றும் மருத்துவ மைய வசதியும் உள்ளன.
இவற்றை வாடகைக்கு எடுத்து, பயிற்சிக்கு பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
போட்டி அட்டவணை குறித்தும், இரவு ஆட்டத்தை அரைமணி நேரத்திற்கு முன்பாக அதாவது இரவு 7.30 மணிக்கு தொடங்குவது குறித்தும் அடுத்த வாரம் நடக்கும் ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் ஆலோசித்து இறுதி செய்யப்படுகிறது.