CRICKETLATEST UPDATESNEWSTAMIL
என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி – அஸ்வின் நெகிழ்ச்சி

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டை வீழ்த்தி சாதனை நிகழ்த்திய அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் 29-வது முறையாக ஐந்து விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்சில் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த அஸ்வின் சதம் விளாசினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 5-வது சதத்தைப் பதிவு செய்தார். சொந்த மண்ணில் சதம் விளாசுவது இதுவே முதல் முறை ஆகும். மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் சதத்தையும் பதிவு செய்தார்.
அஸ்வின் ஒரே போட்டியில் 5 விக்கெட் மற்றும் சதம் விளாசுவது இது மூன்றாவது முறை ஆகும். இந்த சாதனையை ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த அஸ்வின் 2 இன்னிங்சிலும் சேர்த்து 119 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
இந்நிலையில், என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என தமிழக வீரர் அஸ்வின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நான் இப்போது எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. கடந்த சில நாட்களாக என்னை விரும்பிய அனைவருக்கும் நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.