TAMIL
‘என்னை இனவெறியுடன் அழைத்த வீரர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்’ – டேரன் சேமி ஆதங்கம்
‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் என்னை இழிவுப்படுத்தும் எண்ணத்துடன் இனவெறியுடன் அழைத்த அணியின் சக வீரர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரும், முன்னாள் கேப்டனுமான டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு பதிவில்,
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் போது தன்னையும், இலங்கை வீரர் திசரா பெரேராவையும் ‘கலு’ என்று இனவெறியுடன் அழைத்தார்கள் என்று குற்றம்சாட்டி இருந்தார்.
‘கலு’ என்றால் வலிமைமிக்க கருப்பு மனிதர் என்று தான் முதலில் நினைத்தேன்.
ஆனால் கருப்பு இனத்தவரை குறிக்கும் இழிவான சொல் என்பது பிறகு தான் தெரியவந்தது என்றும் கூறியிருந்தார்.
ஆனால் தன்னை நிறவெறியுடன் அழைத்தது ரசிகர்களா? வீரர்களா? என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் தான் விளையாடிய ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி வீரர்களாலேயே இனவெறி கேலி கிண்டலுக்கு ஆளானதாக டேரன் சேமி ஆதங்கத்தை தற்போது வெளிப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியதாவது:-
‘2013 மற்றும் 2014-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் நான் ஐதராபாத் அணிக்காக விளையாடுகையில் சில வீரர்கள் ‘கலு’ என்ற பெயரில் என்னை செல்லமாக அழைத்தார்கள்.
அப்போது அந்த வார்த்தையின் அர்த்தம் எனக்கு தெரியாது. என்னை பற்றி ஏதோ மேன்மையாகவும், அதே நேரத்தில் ஜாலிக்காகவும் சொல்கிறார்கள் என்று நினைத்தேன்.
ஆனால் இப்போது தான் அது என்னை இழிவுபடுத்தும் நோக்கில் சொல்லப்பட்டது என்று அறிகிறேன்.
என்னை அந்த அர்த்தத்தில் தான் அழைத்தீர்களா? என்பதை என்னை அழைத்த நபர்களிடம் தற்போது கேட்க விரும்புகிறேன். அவர்கள் யார் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
அவர்களுக்கு என்னுடைய செல்போன் மற்றும் சமூகவலைதள முகவரிகள் தெரிந்து இருக்கும். அதன் மூலம் என்னை தொடர்பு கொள்ளுங்கள். நாம் உரையாடலாம்.
தவறான அர்த்தத்தில் நீங்கள் சொல்லி இருந்தீர்கள் என்றால் நான் மிகவும் வேதனைப்படுவேன். நான் இன்னும் கோபமாகத் தான் இருக்கிறேன்.
என்னை இழிவுபடுத்த நீங்கள் எண்ணியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். நான் உங்களை எல்லாம் எனது சகோதரர்களாக எண்ணுகிறேன்.
எனவே என்னுடன் பேசுங்கள், பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று சேமி கூறியுள்ளார்.
2014-ம் ஆண்டில் டேரன் சேமியுடன் இருக்கும் குரூப் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா அந்த படத்தில் டேரன் சேமியை ‘கலு‘ என்று தான் குறிப்பிட்டு இருந்தார். இதனால் இஷாந்த் ஷர்மா இந்த சர்ச்சையில் சிக்குவார் என்று தெரிகிறது.