CRICKETLATEST UPDATESNEWSTAMIL

எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க விரும்புகிறார்கள் – நடராஜன் ருசிகர பேட்டி

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியினருடன் வலைப்பயிற்சி பவுலராக சென்ற இடக்கை வேகப்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன் அந்த தொடரில் ஒருநாள், 20 ஓவர், டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டதுடன், பந்து வீச்சில் சிறப்பான பங்களிப்பை அளித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த 29 வயதான நடராஜன் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

 

ஐ.பி.எல். போட்டியில் இருந்து கடந்த 6 மாதம் ஓய்வு இல்லாமல் விளையாடி இருக்கிறேன். தற்போது எனக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சில நாட்கள் ஓய்வு கொடுத்தார்கள். ஓய்வு முடிந்து இன்று (நேற்று) முதல் மீண்டும் பயிற்சியை தொடங்கி விட்டேன். எனது உடல் வலிமையில் ஏற்றம் காண என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறது. அடுத்த 3 வாரம் என்ன பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதனை செய்ய இருக்கிறேன். ஆஸ்திரேலிய தொடரில் வலைப்பயிற்சி பவுலராக செயல்படுகையில் எனக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தது. ஆனால் அதனை இந்திய கிரிக்கெட் வாரியம் நல்ல முறையில் கையாண்டது.

ஐ.பி.எல். போட்டி முதல் ஆஸ்திரேலிய தொடரில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி வரையில் மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினேன். ஆனால் டெஸ்டில் எனது பந்து வீச்சு வேகம் குறைந்து விட்டது. எனது உடல் வலிமை குறைந்தது இதற்கு காரணமாக இருக்கலாம். விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தால் தமிழக அணிக்காக விளையாடுவேன். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி கிடைக்காததால் சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் விளையாடவில்லை.

ஐ.பி.எல். போட்டிக்கு முன்பு விராட்கோலி, டிவில்லியர்ஸ், டோனி போன்ற வீரர்களின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பது கனவாக இருந்தது. அவர்களது விக்கெட்டை கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அதனை நினைத்து பார்க்கையில் பல நாட்கள் தூக்கம் வந்ததில்லை. ஆஸ்திரேலிய தொடர் முடிந்து வந்த பிறகு இன்னும் கூட ரசிகர்கள் பலர் என்னை பார்க்க வீட்டுக்கு வருகிறார்கள். அது மகிழ்ச்சியாக இருந்தாலும், வித்தியாசமான அனுபவமாக உள்ளது. தற்போது வெளியில் கூட போக முடியவில்லை. முன்பு போல் இயல்பாக வெளியில் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். பழனி கோவிலுக்கு சென்று மொட்டை போட்டு விட்டு திரும்பும் போது கூட பலரும் என்னை அடையாளம் கண்டு பாராட்டினார்கள். நான் எப்பொழுதும் சாதாரணமான மனிதனாக இருக்கவே விரும்புகிறேன். எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க டைரக்டர்கள் சிலர் சந்திக்க வீடு தேடி வந்தனர். ஆனால் இப்போது எனக்கு அதில் ஆர்வம் இல்லை. கிரிக்கெட்டில் முழு கவனத்தையும் செலுத்தவே விரும்புகிறேன்.

2015-ம் ஆண்டில் எனது பந்து வீச்சு சந்தேகத்துக்குள்ளாகி தடை விதிக்கப்பட்ட போது வாழ்க்கையே முடிந்து விட்டது என்று நினைத்தேன். மனதளவில் வெகுவாக பாதிக்கப்பட்டேன். அப்போது எனக்கு நண்பர்களும், பயிற்சியாளர்களும் உத்வேகம் அளித்தனர். தமிழக அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் சுப்பிரமணியம் எனது பந்து வீச்சை சரி செய்ய உதவிகரமாக இருந்தார். அவரது அறிவுரையை பின்பற்றி கடுமையாக உழைத்தேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. மூன்று வடிவிலான (20 ஓவர், ஒருநாள், டெஸ்ட்) போட்டியிலும் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே எனது லட்சியமாகும்.

இவ்வாறு நடராஜன் கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker