TAMIL
எனது உலக சாதனையை ஹர்திக் பாண்ட்யாவால் முறியடிக்க முடியும் – யுவராஜ் சிங்
* இந்திய கிரிக்கெட்டில் மூன்று வடிவிலான அணிகளுக்கும் கேப்டனாக விராட் கோலி உள்ளார்.
இங்கிலாந்து அணியை போன்று இந்திய அணியிலும் கேப்டன் பதவியை பிரித்து கொடுத்தால் சரியாக இருக்குமா என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேனிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ‘அது ஒவ்வொரு வீரர்களின் குணாதிசயத்தை பொறுத்தது. ஆனால் விராட் கோலி போன்ற வீரர்கள் கேப்டன்ஷிப்பை பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டார்கள்’ என்று பதில் அளித்தார்.
* ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் அளித்த ஒரு பேட்டியில், ‘நான் முதல் முறையாக டோனியின் பேட்டிங்கை பார்த்த போது பிரமித்து போனேன்.
களத்தில் வித்தியாசமான நிலையில் இருந்து பந்தை அடித்து நொறுக்கினார்.
அவர் இலங்கைக்கு எதிராக 183 ரன்கள் குவித்த ஆட்டம் (2005-ம் ஆண்டு) அபாரமானது.
நான் பார்த்தமட்டில் அவர் தான் மிகவும் ஆற்றல்மிக்க பேட்ஸ்மேன்’ என்றார்.
* ‘சச்சின் தெண்டுல்கரின் பல சாதனைகளை விராட் கோலியால் முறியடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.
அதற்கு அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது’ என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
* ‘சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 12 பந்துகளில் அரைசதம் அடித்திருந்த தனது உலக சாதனையை இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவால் முறியடிக்க முடியும்.
அத்தகைய திறமை அவரிடம் உண்டு’ என்று யுவராஜ்சிங் கூறியுள்ளார்.