இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
இந்த சீசனில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி மொத்தம் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினேன். ஐ.பி.எல்.-ல் நான் விளையாடிய விதம் எனக்கு நிறைய நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசியதன் மூலம் கிடைத்த சாதகமான அம்சம் என்னவென்றால், இப்போது ஆஸ்திரேலிய தொடருக்கு எந்தவித நெருக்கடியும் இன்றி தயாராக முடியும். என் மீது எந்த சுமையும் இல்லை. தற்போது நல்ல நம்பிக்கையுடன் சரியான நிலையில் இருக்கிறேன்.
இந்த நீண்ட ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதலில் வெள்ளை நிற பந்திலும், அதன் பிறகு இளஞ்சிவப்பு பந்து, சிவப்பு பந்துகளில் விளையாடுகிறோம். இதில் எனது கவனம் சிவப்பு பந்தில் (டெஸ்ட் கிரிக்கெட்) தான் உள்ளது. அதற்காக தீவிர பயிற்சி எடுக்கிறேன். களத்தில் நீங்கள் சரியான அளவில் விரும்பிய இடத்தில் பந்தை பிட்ச் செய்து வீசத் தொடங்கி விட்டால் அதன் பிறகு எந்த வடிவிலான கிரிக்கெட்டிலும் சாதிக்க முடியும்.
அணியில் இடம் பெற்றுள்ள எங்களது வேகப்பந்து வீச்சாளர்களால் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீச முடியும். ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில் இத்தகைய வேகம் தேவை. எங்களது மாற்று வேகப்பந்து வீச்சாளர்கள் கூட இவ்வளவு வேகத்தில் வீசக்கூடியவர்கள் தான்.
மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு சூப்பர் ஓவரில் 5 ரன்னுக்குள் அதிரடி பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோரை எனது பந்து வீச்சில் முடக்கியது இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் திருப்தி அளித்த இன்னிங்சாகும்.
இவ்வாறு ஷமி கூறினார்.