TAMIL

எந்த மாதிரியான சூழ்நிலையிலும் விளையாட தயாராக இருக்கிறோம் – ரவிசாஸ்திரி

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாட நியூசிலாந்து சென்றுள்ளது.

இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்திய நேரப்படி பகல் 12.20 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


நியூசிலாந்துக்கு எதிரான போட்டி தொடர் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

‘டாஸ்’ எங்களுக்கு ஒரு பிரச்சினை அல்ல. அதற்கு அப்பாற்பட்டு தான் செயல்பட்டு வருகிறோம்.

உலகின் எந்தவொரு இடத்திலும், எந்தவொரு அணிக்கு எதிராகவும்,

எந்த மாதிரியான சூழ்நிலையிலும் நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறோம்.

இந்த குறிக்கோளை நோக்கி தான் நாங்கள் பயணித்து வருகிறோம்.

உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது எங்களது ஒருமித்த நோக்கமாகும்.

நிச்சயம் அந்த லட்சியத்தை அடைவோம்.

‘நான்’ என்ற வார்த்தை எங்கள் அகராதியில் கிடையாது.

‘நாங்கள்’ என்ற ஒருங்கிணைந்த எண்ணத்துடன் எங்கள் அணி செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொருவரின் சாதனையையும் மற்றவர்கள் கொண்டாடும் ஒரு அணியாக இருக்கிறோம்.



சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்றது எங்களது மன வலிமையையும், நெருக்கடியான

சூழ்நிலையில் சிறப்பாக செயல்படும் எங்களுடைய திறமையையும் நிரூபித்தது.

மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் சந்தித்த மோசமான தோல்வியில் இருந்து மீண்டு வந்து அடுத்த 2 போட்டியிலும்

செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியது.

இது நமது வீரர்களின் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வெளிக்காட்டுவதாக இருந்தது.

விராட்கோலி எப்பொழுதும் துணிச்சலாக செயல்பட வேண்டும் என்று சொல்வார்.

அது இந்த ஆட்டத்தில் பிரதிபலித்தது எனலாம்.

தற்போதைய போட்டிகள், சவால்கள் குறித்து தான் சிந்தித்து வருகிறோம்.

கடந்த கால வரலாறு குறித்து யோசிப்பதில்லை.

லோகேஷ் ராகுல் போன்ற பல்வேறு திறமை கொண்ட வீரர்கள் அணியில் அங்கம் வகிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.



மூத்த வீரரும், மேட்ச் வின்னருமான ஷிகர் தவான் காயத்தால் விலகி இருப்பது ஒட்டுமொத்த அணிக்கும் வருத்தம் அளிக்கிறது.

ஒருநாள் போட்டியில் கேதர் ஜாதவை ஓரங்கட்டுவதாக சொல்வது சரியாகாது.

அணியில் அங்கம் வகிக்கும் அவர் நியூசிலாந்து தொடரில் விளையாடுவார். மற்ற வீரர்களை நடத்துவது போல் தான் அவரும் நடத்தப்படுவார்.

குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரும் சேர்ந்து களம் காண்பது குறித்து சூழ்நிலைக்கு தகுந்தபடி முடிவு செய்வோம்.

அதிரடியாக ஆடக்கூடிய சூர்யகுமார் யாதவை அணிக்கு தேர்வு செய்வது தேர்வு குழுவின் வேலையாகும்.

அதில் நான் தலையிடுவது இல்லை. ஆடுகளத்தின் தன்மை எந்த மாதிரியாக இருக்கும் என்பது குறித்து ஒரு அணியாக நாங்கள் கவலைப்படுவதில்லை.

ஆடுகளத்தை பார்த்த பிறகு அதற்கு தகுந்தபடி செயல்படுவோம்.



இந்த ஆண்டில் நடைபெறும் 20 ஓவர் போட்டிகள் மட்டுமின்றி ஒருநாள் போட்டிகளையும் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம்

நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தயாராகுவதற்கு அடிப்படையாக பயன்படுத்தி கொள்வோம் என்று ரவிசாஸ்திரி கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker