TAMIL
எச்சிலை தேய்க்க தடை: பந்தை பளபளக்க வைக்க மாற்று வழிமுறை அவசியம்: பும்ரா வலியுறுத்தல்
கொரோனா வைரஸ் தாக்கம் தணிந்து மீண்டும் கிரிக்கெட் போட்டி தொடங்கும் போது வீரர்களும், நடுவர்களும் களத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
எச்சில் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதால் பந்தை பளபளக்க செய்ய எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்பது உள்பட பல்வேறு நடைமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐ.சி.சி. நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘களத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை.
பந்தை பளபளக்க செய்ய எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்பது தான் கவனிக்க வேண்டிய அம்சமாகும்.
எச்சிலுக்கு பதிலாக மாற்று வழிமுறையை கண்டறிய வேண்டும்.
பந்தை நன்றாக பராமரிக்கவில்லை என்றால் அது பவுலர்களுக்கு கடினமாக அமையும்.
மைதானத்தின் அளவு குறைந்து கொண்டே போகிறது.
பிட்ச் தட்டையாக மாறி வருகிறது.
இதனால் பவுலர்கள் பந்தை பராமரிக்க மாற்று வழிமுறை அவசியமானதாகும்.
பந்தை பளபளக்க செய்தால் தான் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும். டெஸ்ட் போட்டி எனக்கு மிகவும் பிடித்தமானதாகும்.
அது பந்து வீச்சாளர்களுக்கு அனுகூலமானதாகும்.
ஒருநாள் போட்டியில் இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவதால் கடைசி கட்டத்தில் கூட பந்தை ஸ்விங் செய்ய முடிவதில்லை.
வாரத்தில் 6 நாட்கள் நான் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபடக்கூடியவன்.
கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பந்துவீசி பயிற்சி எடுக்க வழியில்லை.
மீண்டும் களம் திரும்பும் போது உடல் எந்த மாதிரி ஒத்துழைக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்‘ என்று கூறினார்.