TAMIL

ஊரடங்கு முடிந்ததும் உடல்தகுதி சோதனைக்கு செல்வேன்: ரோகித் சர்மா சொல்கிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா லாலிகாவின் ‘முகநூல்’ பக்கத்தில் கால்பந்து தொகுப்பாளருடன் கலந்துரையாடிய போது கூறியதாவது:-

எனது அணியினரை நான் மிகவும் தவற விடுகிறேன். ஆண்டின் 365 நாட்களில் கிட்டத்தட்ட 300 நாட்கள் நாங்கள் ஒன்றாகவே விளையாடுகிறோம், பயணிக்கிறோம்.

ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டு இருப்போம்.

இது ஒரு குடும்பம் போன்றது. முதலில் இவர்களை எல்லாம் (சக வீரர்கள்) ஒன்றிணைத்து அவர்களுடன் விரைவில் கிரிக்கெட் விளையாட வேண்டும், சில பந்துகளாவது அடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

தற்போதைக்கு நண்பர்களுடன் வீடியோ கால், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி தொடர்பில் இருக்க முயற்சிக்கிறேன்.

நியூசிலாந்து தொடரின் போது பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே தாயகம் திரும்பினேன். காயம் குணமடைந்து ஊரடங்குக்கு முன்பாக நான் விளையாடுவதற்கு ஏறக்குறைய தயாராகி இருந்தேன்.

இன்னும் ஒரு வாரத்தில் உடல்தகுதி சோதனைக்கு செல்ல வேண்டி வரும் என்று நினைத்து இருந்தேன். அதற்குள் துரதிர்ஷ்டவசமாக கொரோனா பிரச்சினை வந்து விட்டது.

ஊரடங்கு முடிந்ததும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு (பெங்களூரு) சென்று என்னை உடல்தகுதி சோதனைக்கு உட்படுத்திக் கொள்வேன்.

உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற்றதும் அணியினருடன் இணைந்து மீண்டும் கிரிக்கெட் பயிற்சியை தொடங்குவேன்.

ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானங்களில் விளையாடப்படுவது குறித்து கேட்கிறீர்கள். உலகம் முழுவதும் எந்த விளையாட்டுக்கும் ரசிகர்கள் மிகவும் முக்கியம்.

அவர்கள் தான் உலகின் எந்த ஒரு விளையாட்டையும் கவர்ச்சிகரமாக மாற்றுகிறார்கள்.

ஆனால் தற்போதைய சூழலில் சிறிது காலத்திற்கு அவர்களை மைதானத்திற்குள் அனுமதிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டுள்ளேன்.

மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம்.

நிலைமை படிப்படியாக சீரானதும் உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களை ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கலாம் என்று ரோகித் சர்மா கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker