TAMIL
உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட்டில் 55 பந்தில் 158 ரன்கள் விளாசிய ஹர்திக் பாண்ட்யா
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்த பிறகு தனது உடல்தகுதியை நிரூபிக்க உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
மும்பையில் நடந்து வரும் டி.ஒய்.பட்டீல் 20 ஓவர் கோப்பை கிரிக்கெட்டில் ரிலையன்ஸ் ஒன் அணிக்காக பங்கேற்றுள்ள அவர் நேற்று பி.பி.சி.எல். அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடினார். 55 பந்துகளில் 6 பவுண்டரி, 20 சிக்சருடன் 158 ரன்கள் நொறுக்கி அவுட் ஆகாமல் இருந்தார்.
இதன் மூலம் ரிலையன்ஸ் ஒன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்தது. அடுத்து களம் இறங்கிய பி.பி.சி.எல். அணி 134 ரன்னில் சுருண்டு தோல்வி அடைந்தது.
ஹர்திக் பாண்ட்யா ஒரு ஓவர் பந்து வீசி 6 ரன் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
சில தினங்களுக்கு முன்பு ஹர்திக் பாண்ட்யா இதே தொடரில் 39 பந்துகளில் 105 ரன்கள் விளாசினார்.
வருகிற 12-ந்தேதி தொடங்கும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.