TAMIL

உலக கோப்பை வென்று 37 ஆண்டு நிறைவு: இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத மகத்தான நாள்

எ ளிதில் வெல்ல முடியாத அணியாக மிடுக்குடன் வலம் வந்த வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக உலக கோப்பைக்கு முத்தமிட்ட நாள் இன்று (ஜூன்.25).

3-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 1983-ம் ஆண்டு இங்கிலாந்தில் அரங்கேறியது.

60 ஓவர்கள் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டன.

‘பி’ பிரிவில் அங்கம் வகித்த இந்திய அணி லீக் சுற்று முடிவில் 4 வெற்றி, 2 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் அரைஇறுதியை உறுதி செய்தது.

லீக் சுற்றில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவை தலா ஒரு முறை இந்திய அணி வீழ்த்தினாலும், ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் இந்தியா 17 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை தாரைவார்த்து தத்தளித்த நிலையில் கேப்டன் கபில்தேவ் 6-வது வரிசையில் களம் புகுந்து ருத்ரதாண்டவமாடினார்.

ஜிம்பாப்வே பந்து வீச்சை பொளந்து கட்டிய அவர் 175 ரன்கள் (138 பந்து, 16 பவுண்டரி, 6 சிக்சர்) குவித்து பிரமிக்க வைத்தார்.

அவரது சரவெடியால் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரைஇறுதி வாய்ப்பையும் தட்டிச் சென்றது.

உலக கோப்பை போட்டியில் இந்திய கேப்டன் ஒருவரின் அதிகபட்சமாக இந்தநாள் வரை கபில்தேவின் ஸ்கோரே நீடிக்கிறது.

அரைஇறுதியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் விரட்டியது.

ஜூன் 25-ந்தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் மகுடத்துக்காக கோதாவில் குதித்தன.

முதல் 2 உலக கோப்பையையும் வசப்படுத்தியிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசுர பலத்துடன் திகழ்ந்ததால் அந்த அணிக்கே கோப்பை என்பது தான் பெரும்பாலானவர்களின் கணிப்பாக எதிரொலித்தது.

முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணி ஆன்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங், மால்கம் மார்ஷல், ஜோயல் கார்னர் ஆகிய சூறாவளி பந்து வீச்சாளர்களின் தாக்குதலில் நிலைகுலைந்தது.

54.4 ஓவர்களில் இந்திய அணி 183 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் 38 ரன்கள் (57 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார்.

‘அற்ப ஸ்கோர்….நின்று ஆடினால் அதிரடி மன்னன் விவியன் ரிச்சர்ட்சே இந்த இலக்கை எட்ட வைத்து விடுவாரே?’ என்று வர்ணனையாளர்கள் கலாய்த்தனர்.

அப்போதே கோப்பையை வென்று விட்டது போன்ற மாயைக்குள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிதந்தனர்.

இன்னொரு பக்கம் நம்பிக்கையற்று காணப்பட்ட இந்திய வீரர்களுக்கு கேப்டன் கபில்தேவ் புத்துயிர் ஊட்டினார். “வெஸ்ட் இண்டீஸ் நம்மை 183 ரன்னில் ‘ஆல்-அவுட்’ செய்துள்ளது என்றால், நம்மாலும் அதே போன்று செய்ய முடியும்.

அதை செய்யக்கூடிய திறமை நமது பந்து வீச்சாளர்களிடம் உண்டு.

ஏற்கனவே லீக் போட்டியில் அவர்களை சாய்த்து இருக்கிறோம்.

அதனால் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.

குறைவான ஸ்கோர் என்றாலும் கடைசி வரை போராடுவோம்” என்ற கபில்தேவின் ஒவ்வொரு வார்த்தைகளும் வீரர்களுக்குள் உத்வேகத்தை கிளர்ந்தெழச் செய்தது.

சுலபமான இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீசின் தொடக்க வீரர்களை இந்திய பவுலர்கள் எளிதில் காலி செய்தனர். அவர்களின் ஒரே குறி விவியன் ரிச்சர்ட்ஸ் தான்.

அதிரடி காட்டிய அவர் 7 பவுண்டரியுடன் 33 ரன்கள் (28 பந்து) எடுத்த நிலையில் மதன்லால் வீசிய பந்தை ‘மிட்விக்கெட்’ திசையில் தூக்கினார். கிட்டத்தட்ட 20 மீட்டர் ஓடிச்சென்று கபில்தேவ் பந்தை லாவகமாக பிடித்தார்.

அந்த கேட்ச்சே ஆட்டத்தின் திருப்பு முனை. அதன் பிறகு கேப்டன் கிளைவ் லாயிட் 8 ரன்னில் வெளியேற ஆட்டம் முழுமையாக இந்தியா பக்கம் திரும்பியது.

சீதோஷ்ண நிலையை கனகச்சிதமாக பயன்படுத்தி இந்திய பவுலர்கள் ஸ்விங் செய்த விதம் வெஸ்ட்இண்டீஸ் பேட்ஸ்மேன்களை மிரள வைத்தது. 52 ஓவர்களில் வெறும் 140 ரன்னில் முடங்கினர்.

இதன் மூலம் இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலக கோப்பையை உச்சிமுகர்ந்து வரலாறு படைத்தது.

இந்த உலக கோப்பை போட்டிக்கு புறப்படுவதற்கு முன்பு இந்திய வீரர்கள் மத்தியில் பெரிய அளவில் நம்பிக்கையும் கிடையாது, எதிர்பார்ப்பும் கிடையாது.

லீக் சுற்றோடு நடையை கட்டி விடுவோம் என்று கருதி சில வீரர்கள் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்தார்கள் என்று கூட சொல்லப்படுவது உண்டு.

ஆனால் 24 வயதான அரியானா எக்ஸ்பிரஸ் கபில்தேவின் சாமர்த்தியமான கேப்டன்ஷிப் இந்திய கிரிக்கெட்டுக்கு உலக அரங்கில் புதிய அடையாளத்தை உருவாக்கி கொடுத்தது.

இந்தியாவில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இந்த வெற்றியே அச்சாரம் என்றால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கும் இதுவே முதல்படியாக அமைந்தது என்று கூறினால் மிகையாகாது.

37 ஆண்டுகள் உருண்டோடி விட்ட போதிலும் அந்த மறக்க முடியாத நினைவுகளை நமது வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைதளம் மூலம் மீண்டும் ஒரு முறை அசைப்போட்டு வருகிறார்கள்…!!!

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker