TAMIL

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் ஓமனிடம் இந்திய அணி தோல்வி – அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. இதில் ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இந்திய அணி ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் கத்தார், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஓமன் ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன. ஒவ்வொரு அணியும் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும்.




இந்த நிலையில் இந்திய அணி நேற்று தனது 5-லீக் ஆட்டத்தில் ஓமன் அணியை மஸ்கட்டில் சந்தித்தது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த ஓமன் வீரர்கள் வெகுவாக ஆதிக்கம் செலுத்தினர். 7-வது நிமிடத்தில் ஓமனுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பில் ஓமன் வீரர் மோசின் அல் காசானி அடித்த பந்து கோல் கம்பத்திற்கு மேலாக சென்று வெளியேறியது. இதனால் அவர் ஏமாற்றத்திற்கு உள்ளானாலும் 33-வது நிமிடத்தில் பரிகாரம் தேடிக்கொண்டார். தற்காப்பு ஆட்டத்தில் இந்திய வீரர்கள் செய்த தவறை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அல் காசானி கோல் அடித்து தங்கள் அணிக்கு முன்னிலையை உருவாக்கினார். பதில் கோல் திருப்ப இந்திய வீரர்கள் கடுமையாக முயன்றனர். ஒரு சில முறை எதிரணியின் கோல் எல்லையை நெருங்கினார்களே தவிர கோலாக்க முடியவில்லை. முடிவில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் ஓமனிடம் தோல்வி அடைந்தது. இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத இந்திய அணி 3 புள்ளியுடன் (2 தோல்வி, 3 டிரா) 4-வது இடத்தில் இருக்கிறது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து போய் விட்டது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker