TAMIL
உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அப்பீல் செய்வோம்: சகோதரர் கம்ரன் பேட்டி
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் 29 வயதான உமர் அக்மல், பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட தன்னை அணுகிய சந்தேக நபர் குறித்து கிரிக்கெட் வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் மறைத்தது சர்ச்சையாக வெடித்தது.
இதையடுத்து அவர் மீது இரண்டு பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து விசாரித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் பைசல் இ மிரான் சவுகான், உமர் அக்மலுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 3 ஆண்டு தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனால் உமர் அக்மல் அதிர்ச்சிக்குள்ளானார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், உமர் அக்மலின் சகோதரருமான கம்ரன் அக்மல் கூறுகையில், ‘உமர் அக்மலுக்கு இவ்வளவு கடினமான தண்டனை விதிக்கப்பட்டது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.
3 ஆண்டு தடை என்பது மிகவும் மோசமான தண்டனை. இந்த தடையை எதிர்த்து அவர் நிச்சயம் அப்பீல் செய்வார்.
இதற்கு முன்பு இதே போல் சூதாட்டத்தரகர்கள் தொடர்பு கொண்டதை மறைத்த புகாரில் சிக்கிய வீரர்களுக்கு (முகமது இர்பானுக்கு 6 மாத தடை, முகமது நவாசுக்கு 2 மாத தடை) குறைந்த கால தடை விதிக்கப்பட்ட நிலையில், உமர் மீது மட்டும் ஏன் கடினமான நடவடிக்கை பாய்ந்தது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து அதன் பிறகு சம்பந்தப்பட்ட அமைப்பில் முறையீடு செய்வோம்’ என்றார்.
இதற்கிடையே உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்கள் ரமிஸ் ராஜா, ஜாகீர் அப்பாஸ் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ரமிஸ்ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உமர் அக்மல் அதிகாரபூர்வமாக முட்டாள்கள் பட்டியலில் இணைந்து விட்டார். 3 ஆண்டு தடையின் மூலம் திறமை எப்படி வீணடிக்கப்படுகிறது.
கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க சட்டம் இயற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. ‘மேட்ச் பிக்சிங்’ செய்பவர்களை ஜெயிலில் போட வேண்டும்.
இல்லாவிட்டால் இன்னும் இது போன்ற அவமானங்களை எதிர்கொள்ள வேண்டியது வரும்’என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜாகீர் அப்பாஸ் கூறுகையில், ‘விதிமுறையை பின்பற்றாத வீரரை எப்படி திறமையானவர் என்று சொல்ல முடியும்? நீங்கள் விதிமுறையை பின்பற்றாவிட்டால் சிறந்த வீரராக இருக்க முடியாது.
உமர் அக்மல் ஒன்றும் ஜூனியர் வீரர் கிடையாது. பாகிஸ்தான் அணிக்காக நீண்ட காலம் விளையாடி இருக்கிறார்.
சந்தேக நபர்கள் யாரும் தொடர்பு கொள்ளும் போது என்ன செய்ய வேண்டும் என்ற ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு விதிமுறைகள் அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மூலம் பலமுறை சொல்லப்பட்டு இருக்கும்.
ஆனால் அவர் அதை உதா சீனப்படுத்தி விட்டார்.
அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிந்து போய் விட்டதாக நினைக்கிறேன். இந்த தண்டனை அவருக்கு சரி தான்’ என்றார்.