CRICKETLATEST UPDATESNEWSTAMIL

இஷான் கிஷான் ஆட்டத்தை மாற்றினார் – விராட்கோலி புகழாரம்

இஷான் கிஷான் ஆட்டத்தை மாற்றினார் - விராட்கோலி புகழாரம்

2-வது 20 ஓவர் போட்டி யில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா பதிலடி கொடுத்தது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 165 ரன் இலக்காக இருந்தது.

தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிகபட்சமாக 35 பந்தில் 46 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் மார்கன் 28 ரன்னும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர், ‌ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், சாஹல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 13 பந்து எஞ்சியிருந்த நிலையில் வெற்றி பெற்றது. 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தது.

கேப்டன் விராட் கோலி 49 பந்தில் 73 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), இஷான் கி‌ஷன் 32 பந்தில் 56 ரன்னும் (5 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

தொடக்கத்திலேயே ரன் எதுவும் இல்லாத நிலையில் முதல் விக்கெட் விழுந்தது. இதனால் 3-வது வீரராக களம் இறங்கிய நான் என்ன செய்ய வேண்டும் என்று முயற்சித்தேன்.

ஆனால் மறுமுனையில் இருந்த இஷான் கிஷான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதிரடியாக விளையாடினார். அவர் ஆட்டத்தின் தன்மையை மாற்றினார். எதிரணியிடம் இருந்து போட்டியை முற்றிலும் மாற்றி இந்தியாவின் பக்கம் ஆட்டத்தை கொண்டு வந்தார். எங்களது பார்ட்னர்ஷிப் (52 பந்தில் 94 ரன்) முக்கிய பங்கு வகித்தது.

தனது அறிமுக போட்டியிலேயே இஷான் கிஷான் தனது திறமையை வெளிப்படுத்தினார். ஐ.பி.எல். போட்டியில் அவர் திறமையான பந்து வீச்சை எதிர்கொண்டு அபாரமாக ஆடி இருந்தார். தற்போது சர்வதேச அளவில் வேகப் பந்து வீச்சில் அற்புதமாக சிக்சர்களை அடித்தார்.

அவர் ஒரு பயமில்லாத வீரராக காட்சி அளிக்கிறார். அவர் தொடர்ந்து இதேமாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இங்கிலாந்து அணி 12 ஓவரில் 120 ரன்னை தொட்டது. இதனால் மிகப்பெரிய ரன்னை குவிக்க வேண்டும் என்று கருதினேன். ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் கடைசி கட்டத்தில் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள்.

வாஷிங்டன் சுந்தர் பெயரை இங்கு கண்டிப்பாக குறிப்பிட்டு ஆக வேண்டும். அவர் அபாரமாக வீசினார். பந்து வீச்சில் அனைவருமே சிறப்பாக செயல்பட்டனர்.

பேட்டிங்கும், பந்து வீச்சும் நன்றாக இருந்தது. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் மார்கன் கூறும்போது, “மெதுவான இந்த ஆடுகளத்தில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. இந்திய அணியின் புதுமுக வீரர் இஷான் கிஷான் அபாரமாக ஆடி எங்களிடம் இருந்து ஆட்டத்தை பறித்து விட்டார்” என்றார்.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 3-வது ஆட்டம் நாளை நடக்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker