CRICKETLATEST UPDATESNEWSTAMIL
இஷாந்த் சர்மாவை உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும்: சுனில் கவாஸ்கர்
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இரண்டரை நாட்களிலேயே முடிவடைந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்தியா 2-வது இன்னிங்சில் 36 ரன்னில் சுருண்டு படுமோசமான சாதனையை பதிவு செய்தது.
இந்த போட்டியில் முகமது ஷமி காயம் அடைந்து எஞ்சிய போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே இஷாந்த் சர்மா இல்லாத நிலையில் முகமது ஷமியும் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் இஷாந்த் சர்மாவை உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘முகமது ஷமி காயம் அடைந்திருப்பது மிகப்பெரிய பிரச்சினை. அவர் விக்கெட் எடுக்கும் திறமை படைத்தவர். பவுன்சர் மற்றும் யார்க்கர்கள் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு ஷாக் கொடுக்க முடியும். அவர் விளையாடவில்லை என்றால், அது இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும்.
இஷாந்த் சர்மா ஃபிட் ஆகியிருந்தால், அவரை உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும். அவர் ஒரு நாளைக்கு 20 ஓவர்கள் வீச முடியும் என்றால், அணி நிர்வாகம் நாளைய விமானத்திலேயே ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும். அப்படி என்றால் அவரால் சிட்னி டெஸ்டில் பங்கேற்க இயலும்.
இந்தியா இந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்தியா சரியான பேக்-அப் வைத்திருக்கவில்லை. சைனியிடம் விக்கெட் எடுக்கும் திறமை உள்ளது. ஆனால், பயிற்சி ஆட்டத்தில் வீசியதை பார்க்கும்போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரியவில்லை’’ என்றார்.
ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் வருகிற 26-ந்தேதி மெல்போர்னிலும், 3-வது டெஸ்ட் சிட்னியில் அடுத்த மாதம் 7-ந்தேதியும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் அடுத்த மாதம் 15-ந்தேதியும் தொடங்குகிறது.