TAMIL
இலங்கை-பாகிஸ்தான் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு
இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது.
இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டமும் மோசமான வானிலையால் பாதிப்புக்குள்ளானது.
முந்தைய நாள் இரவில் பெய்த பலத்த மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டத்தை தொடங்க முடியவில்லை.
அதன் பிறகு ஆட்டம் தொடங்கி வெறும் 5.2 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டது. மீண்டும் மழை மேகம் திரண்டு போதிய வெளிச்சம் இல்லாத சூழல் உருவானதால், அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 91.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 282 ரன்கள் சேர்த்துள்ளது. தனஞ்ஜெயா டி சில்வா 87 ரன்களுடனும், தில்ருவான் பெரேரா 6 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.