TAMIL
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் சிசிடிவி காட்சிகள் மர்மமாக நீக்கம்.. வெளிச்சத்திற்கு வரும் பரபரப்பு தகவல்
மைட்லேண்ட் பிளேஸில் உள்ள இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமையகத்தில் சிசிடிவி காட்சிகள் காணவில்லை என்று இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி), குற்றவியல் புலனாய்வுத் துறையில் (சி.ஐ.டி) புகார் அளித்துள்ளது என மூத்த அதிகாரி தெரிவித்துள்ளர்.
கிரிக்கெட் வாரியத்தின் ஐந்து நாட்கள் சிசிடிவி காட்சிகள் மர்மமாக நீக்கப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார்.
சிஐடி-யிடம் புகார் அளிப்பதற்கான வழிமுறைகளை இலங்கை கிரிக்கெட் செயலாளர் மோகன் டி சில்வா வழங்கியுள்ளார்.
எவ்வாறாயினும், புகாரை வாபஸ் பெற எஸ்.எல்.சி.க்குள் அழுத்தம் இருந்ததாக அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.
அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தல்களுக்குப் பின்னர் அரசாங்கம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சில கோப்புகள் கிரிக்கெட் வாரிய வளாகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன என்ற சந்தேகம் எழுந்ததாக எஸ்.எல்.சி வட்டாரம் மேலும் கூறியுள்ளது. ஆதாரங்களை மறைக்க சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறியது.
முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் பல ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து எஸ்.எல்.சி தீவிர கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது.
சட்டவிரோதமாக ஒரு வெளிநாட்டு வங்கி கணக்கிற்கு நிதி மாற்றுவது குறித்து ஏற்கனவே சிஐடி விசாரணை உள்ளது.
தங்களது இணைய சேவையகம் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை எஸ்.எல்.சி நிராகரித்தது. இருப்பினும், சேவையகத்தை ஹேக்கிங் செய்யவில்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உயர்மட்ட எஸ்.எல்.சி ஊழியரை பொலிசார் கைது செய்தனர்.
சிசிடிவி காட்சிகளை நீக்குவது மற்றும் கணினி ஹார்ட் டிரைவ்களள் திருடப்படுவது இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு புதிதல்ல.
2011 ஆம் ஆண்டில் இலங்கை வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணம் செலுத்த முடியாமல் திவாலானபோது, புதிய மைதானங்களை நிர்மாணிக்கும் போது நிதி தவறாக நிர்வகிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பின்னர் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே, டி.எஸ். டி சில்வா மற்றும் நிஷாந்தா ரனதுங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட்டில் விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார்.
ஒரு வாரம் கழித்து, எஸ்.எல்.சி தலைமையகத்தில் உள்ள கணினி ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயுள்ளன, மேலும் விசாரணைகள் தொடங்கப்பட்டன.
சி.பி.ரத்நாயக்க எஸ்.எல்.சி.யை நாட்டின் மிக ஊழல் நிறைந்த நிறுவனங்களில் ஒன்று என விமர்சித்தார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு, நிதியை தவறாக நிர்வகித்ததற்காக பாராளுமன்ற கண்காணிப்புக் குழு மூலம் எஸ்.எல்.சி-க்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக பல வீரர்கள், பயிற்சியாளர்கள் உட்பட பலர் இடைநீக்கம் செய்யப்பட்டனர் அல்லது தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.