TAMIL

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 3-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி; தொடரையும் கைப்பற்றியது

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்றிரவு நடந்தது.

இந்திய அணியில் மூன்று மாற்றமாக ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே, யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட்டனர்.

இலங்கை அணியில் காயமடைந்த உதனாவுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் மேத்யூஸ் இடம் பிடித்தார்.



‘டாஸ்’ ஜெயித்த இலங்கை கேப்டன் மலிங்கா, பனிப்பொழிவின் தாக்கத்தை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். 2-வது ஓவரில் கடினமான கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த தவான் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி துரிதமான ரன் சேகரிப்பில் ஈடுபட்டார்.

லோகேஷ் ராகுலும் இலங்கை பந்து வீச்சை நொறுக்கினார்.

மேத்யூஸ் ஓவரில் 2 பவுண்டரி விளாசிய ராகுல், தனஞ்ஜெயா டி சில்வாவின் பந்து வீச்சில் சிக்சர் பறக்க விட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

இதனால் ஸ்கோர் கிடுகிடுவென எகிறியது. ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் இந்தியா 63 ரன்களை திரட்டி அசத்தியது.

இந்திய அணிக்கு வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்த இந்த கூட்டணியை சுழற்பந்து வீச்சாளர் சன்டகன் உடைத்தார்.

அணியின் ஸ்கோர் 97 ரன்களாக (10.5 ஓவர்) உயர்ந்த போது தவான் 52 ரன்களில் (36 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்.

2-வது விக்கெட்டுக்கு இறங்கிய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் சந்தித்த முதல் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டு அட்டகாசப்படுத்தினார்.

ஆனால் ரன்ரேட்டை தளரவிடக்கூடாது என்ற நோக்கில் ஆடிய சாம்சன் (6 ரன்) ஹசரங்காவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ.
ஆனார்.

அடுத்த ஓவரில் லோகேஷ் ராகுல் (54 ரன், 36 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஸ்ரேயாஸ் அய்யர் (4 ரன்) சன்டகனின் சுழலில் சிக்கினர்.



25 ரன் இடைவெளியில் 4 விக்கெட் சரிந்ததால் இந்தியா லேசான தடுமாற்றத்திற்கு உள்ளானது.

வழக்கத்துக்கு மாறாக 6-வது வரிசையில் களம் புகுந்த இந்திய கேப்டன் விராட் கோலி நெருக்கடியை தணித்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.

மேத்யூஸ் ஓவரில் சிக்சர், பவுண்டரி ஓடவிட்டு உற்சாகப்படுத்திய கோலி (26 ரன், 17 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) தேவையில்லாமல் 2-வது ரன்னுக்கு ஓடி ரன்-அவுட்டில் வீழ்ந்தார்.

அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் டக்-அவுட் ஆனார்.

இதைத் தொடர்ந்து மனிஷ் பாண்டேவும், ஷர்துல் தாகூரும் கைகோர்த்து கடைசி 2 ஓவர்களில் இலங்கை பந்து வீச்சை தெறிக்க விட்டனர்.

ஆச்சரியப்படும் வகையில் ஷர்துல் தாகூர், எதிரணி கேப்டன் மலிங்கா, குமாரா ஓவர்களில் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டு மிரள வைத்தார்.

இறுதி 2 ஓவர்களில் அவர்கள் திரட்டிய 34 ரன்களின் பலனாக இந்தியா 200 ரன்களை தாண்டியது.

20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஷர்துல் தாகூர் 22 ரன்களுடனும் (8 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), மனிஷ் பாண்டே 31 ரன்களுடனும் (18 பந்து, 4 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

அடுத்து 202 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி இந்திய பந்து வீச்சில் திணறியது.

தொடக்க ஆட்டக்காரர்கள் குணதிலகா (1 ரன்), அவிஷ்கா பெர்னாண்டோ (9 ரன்) மற்றும் விக்கெட் கீப்பர் குசல் பெரேரா (7 ரன்) ஆகியோர் இந்தியாவின் வேகத்தில் பணிந்தனர்.

இந்த வீழ்ச்சியில் இருந்து இலங்கை அணியால் மீள முடியவில்லை.

மிடில் வரிசையில் மேத்யூசும் (3 சிக்சருடன் 31 ரன்), தனஞ்ஜெயா டி சில்வாவும் (57 ரன், 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) இணைந்து தங்கள் அணியை 100 ரன்களை கடக்க வைத்தது மட்டுமே அவர்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதல் ஆகும்.



அவர்களை தவிர வேறு யாரும் அந்த அணியில் இரட்டை இலக்கத்தை தொடவில்லை.

முடிவில் இலங்கை அணி 15.5 ஓவர்களில் 123 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டம் மழையால் ரத்தான நிலையில் இந்தூரில் நடந்த 2-வது ஆட்டத்திலும் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றிருந்தது.

இதன் மூலம் இ்ந்த தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

22 ரன் மற்றும் 2 விக்கெட் என்று ஆல்-ரவுண்டராக ஜொலித்த இந்திய வீரர் ஷர்துல் தாகூர் ஆட்டநாயகன் விருதையும், வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

கேப்டனாக 11 ஆயிரம் ரன்களை கடந்தார், கோலி

இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு ரன் எடுத்த போது, ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) கேப்டனாக 11 ஆயிரம் ரன்களை கடந்தார்.

இந்த மைல்கல்லை எட்டிய 6-வது வீரர், இந்திய அளவில் 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (15,440 ரன்),தென்ஆப்பிரிக்காவின் கிரேமி சுமித் (14,878), நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங் (11,561 ரன்), இந்தியாவின் டோனி (11,207 ரன்), ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் (11,062 ரன்) ஆகியோர் இச்சாதனையை படைத்துள்ளனர்.

அதே சமயம் இந்த இலக்கை வேகமாக எட்டிய கேப்டன் என்ற பெருமையை ரிக்கிபாண்டிங்கிடம் இருந்து விராட் கோலி (196-வது சர்வதேச இன்னிங்ஸ்) தட்டிப்பறித்தார்.



ரிக்கி பாண்டிங், கேப்டன்ஷிப்பில் 11 ஆயிரம் ரன்களை கடப்பதற்கு 252 இன்னிங்ஸ் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

பும்ரா சாதனை

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இலங்கை வீரர் குணதிலகாவின் விக்கெட்டை சாய்த்தார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இது அவரது 53-வது விக்கெட்டாகும்.

இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை அறுவடை செய்த இந்திய பவுலர் என்ற மகிமையை பெற்றார்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், அஸ்வின் ஆகியோர் தலா 52 விக்கெட்டுகளுடன் அடுத்த இடங்களில் உள்ளனர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker