IPL TAMILTAMIL

‘இலக்கை எட்டும் நோக்குடன் டோனி ஆடவில்லை’ கம்பீர், ஷேவாக் சாடல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய இலக்கை நோக்கி ஆடிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 7-வது வரிசையில் பேட்டிங் செய்தது பெரும் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது.

இது குறித்து இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் டோனி பின்வரிசையில் இறங்கியது உண்மையிலேயே எனக்கு கொஞ்சம் ஆச்சரியம் தான்.

அதுவும் ருதுராஜ் கெய்க்வாட், சாம் கர்ரனை எல்லாம் முன்வரிசையில் அனுப்பி விட்டு அதன் பிறகு இறங்க முடிவு எடுத்தது ஆச்சரியமாகவே இருந்தது.

அவர் இவ்வாறு செய்ததில் எந்த அர்த்தமும் இருப்பதாக தெரியவில்லை. கேப்டன் என்பவர் அணியை முன்நின்று வழிநடத்த வேண்டும். அது தான் அழகு.

217 ரன்கள் இலக்கை விரட்டும் போது 7-வது பேட்டிங் வரிசையிலா இறங்குவது? அவர் வந்த போது ஆட்டமே கிட்டத்தட்ட முடிந்து போய் விட்டது.

பிளிஸ்சிஸ் மட்டும் தனி நபராக போராடிக் கொண்டிருந்தார். கடைசி ஓவரில் டோனி 3 சிக்சர் அடித்தது குறித்து நீங்கள் பேசலாம். அதனால் என்ன பிரயோஜனம்.

அவரது தனிப்பட்ட கணக்கில் ரன் சேர்ந்துள்ளது அவ்வளவு தான்.

கடைசி ஓவரில் ஆடிய ஆட்டத்தை 4-வது அல்லது 5-வது வரிசையில் பிளிஸ்சிஸ்சுடன் கைகோர்த்து செய்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கலாம்.

ஒவ்வொரு ஆட்டத்தையும் முடிந்தவரை வெல்ல முயற்சிக்க வேண்டும்.

ஆனால் அவர்களுக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி நோக்கமே இல்லை. சேசிங்கிலும் எந்த ஒரு கட்டத்திலும் நெருங்கவில்லை. டோனி 7-வது வரிசையில் ஆடியது முற்றிலும் தவறான கணக்கீடு. இது சரியான கேப்டன்ஷிப் அல்ல’ என்றார்.

மற்றொரு இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் கூறுை-யில், ‘கடைசி ஓவரில் டோனி விளாசிய 3 சிக்சர் சென்னை அணி இலக்கை நெருங்கியது போன்ற எண்ணத்தை தோற்றுவிக்கலாம். உண்மை என்னவென்றால், டோனி நடுவில் இலக்கை விரட்ட கூட முயற்சிக்கவில்லை என்பது தான். இதற்கு அவர் (முதல் 13 பந்தில் 10 ரன் எடுத்த டோனி அடுத்த 4 பந்தில் 19 ரன் சேர்த்தார்) பந்துகளை அடிக்காமல் விரயம் செய்ததே சான்று. அவர் முன்வரிசையில் இறங்கியிருக்க வேண்டும். மிடில் ஓவர்களில் ரன்ரேட் வெகுவாக தளர்ந்து விட்டது. ஒரு வேளை அப்படி ரன்ரேட் குறையாமல் கடைசி ஓவரில் 20-22 ரன்கள் தேவையாக இருந்து, அந்த சமயத்தில் டோனி 3 சிக்சர் அடிக்கிறார் என்றால், ‘வாவ்… அற்புதமான நிறைவு’ என்று மக்கள் பாராட்டியிருப்பார்கள். பீல்டிங்கின் போது கூட டோனியின் சில முடிவுகள் விசித்திரமாகவே இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஜடேஜா, பியுஷ் சாவ்லா ரன்களை வாரி வழங்கிய போதும், அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தார். இந்த ஆட்டத்தை பொறுத்தவரை டோனியின் கேப்டன்ஷிப்பை மதிப்பிட சொன்னால், 10-க்கு 4 மதிப்பெண் தான் வழங்குவேன்’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker