TAMIL
இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய ரன்-அவுட்டை தடுத்த மைக்ரோபோன்.!
முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மைக்ரோபோன் மூடியால் அவுஸ்திரேலிய கேப்டன் ரன்-அவுட்-ல் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியது இந்திய வீராங்கனைகளுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு டி-20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின.
இங்கிலாந்து தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் இன்று மெல்பர்னின் ஜன்ங்சன் ஓவல் மைதானத்தில் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-அவுஸ்திரேலியா மோதின.
போட்டியின் இறுதியில் இந்தியாவை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலிய கோப்பையை வென்றது.
அவுஸ்திரேலிய இன்னிங்ஸின் போது 13வது ஒவரை இந்திய வீரராங்கனை அருந்ததி ரெட்டி பந்து வீச, அவுஸ்திரேலிய கேப்டன் மெக் லெனிங் பந்தை நேராக அடித்து ஓட்டம் எடுக்க ஓடினார்.
எனினும், பந்தை பிடித்த இந்திய வீராங்கனை பந்து வீச்சாளர் பக்கம் இருக்கும் ஸ்டம்பை நோக்கி சரியாக வீசினார்.
ஆனால், எதிர்பாராதவிதமாக பந்து ஸ்டம்பிற்கு கீழ் இருந்த மைக்ரோபோன் மூடி மீது பட்டு திசை திரும்பிச் சென்றது.
பந்து ஸ்டம்ப் மீது பட்டிருந்தால் லெனிங் 20 ஓட்டங்களில் நடையை கட்டியிருப்பார். இச்சம்பவம் இந்திய வீராங்கனைகளுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.