தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 17 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த ஆட்டத்தில் 342 ரன் இலக்குடன் பாகிஸ்தானுடன் விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர் பகர் சமான் ஒருவரே தென் ஆப்ரிக்கா பந்து வீச்சை சமாளித்தார். மற்ற வீரர்கள் எளிதில் ஆட்டம் இழந்தனர்.
பகர் சமான் 193 ரன் குவித்து புதிய சாதனை படைத்தார். 155 பந்துகளில் 18 பவுண்ட்ரி 10 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். ஆனாலும் அவரால் அணியை வெற்றிபெற வைக்க முடியவில்லை.
பகர் சமான் ரன் அவுட் முறையில் ஆட்டத்தின் கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். அவரது ரன் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது. தென் ஆப்ரிக்க விக்கெட் கீப்பர் குயின்டன் டிகாக் அவரை தந்திரமான முறையில் ரன் அவுட் செய்தார். இது தொடர்பாக குயின்டன் டிகாக் மீது நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கிடையே 193 ரன் குவித்தும் தோல்வியடைந்தது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று பாகிஸ்தான் வீரர் பகர் சமான் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இரட்டை சதம் அடிக்காதது எனக்கு வருத்தத்தை அளிக்கவில்லை. போட்டியில் தோற்றதுதான் மிகுந்த வருத்தத்தை அளித்தது. ஏமாற்றமாக இருந்தது. நாங்கள் வெற்றி பெற்று இருந்தால் மிகவும் அற்புதமாக இருந்திருக்கும்.
எனது கவனம் எல்லாம் வெற்றி பெறுவதில் மட்டுமே இருந்தது. இரட்டை சதத்தை பற்றி நினைக்கவில்லை. என்னால் இறுதி வரை களத்தில் இருக்க முடியாமல் போனது ஏமாற்றமே.
இவ்வாறு பகர் சமான் கூறியுள்ளார்.