CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
இன்று 48-வது ஆட்டம்: பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவது மும்பையா? பெங்களூரா?
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்கியது.
இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
நேற்றுடன் 47 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. ஆனால் இதுவரை எந்த அணியும் இன்னும் அதிகாரப்பூர்வமாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணி ஐதராபாத்திடம் தோற்றதால் அந்த வாய்ப்பும் இல்லாமல் போனது. பிளேஆப் வாய்ப்பை இழந்த ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.
ஐ.பி.எல். போட்டியில் 48-வது ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் நடக்கிறது. இதில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் – இரண்டாவது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே 7 வெற்றி 4 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளன. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும். பிளேஆப் சுற்றுக்கு நுழையும் முதல் அணி மும்பையா? பெங்களூரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணியிலும் சிறந்த அதிரடி வீரர்கள் உள்ளனர். இதனால் வெற்றிக்காக அவர்கள் கடுமையாக போராடுவார்கள். எனவே இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.
மும்பை அணியில் குயின்டன் டிகாக், சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, தற்காலிக கேப்டன் போல்லார்ட், இஷான் கிஷன், போல்ட், பும்ரா போன்ற சிறந்த வீரர்களும் பெங்களூர் அணியில் கேப்டன் வீராட் கோலி, டிவில்லியர்ஸ், ஆரோன் பிஞ்ச், படிக்கல், யசுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.
மும்பை அணி ஏற்கனவே சூப்பர் ஓவரில் பெங்களூரிடம் தோற்று இருந்தது. அதற்கு பதிலடி கொடுத்து 8-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளுமே கடைசியாக ஆடிய ஆட்டத்தில் தோற்றது. வெற்றிப் பாதைக்கு திரும்ப அவைகள் முயற்சிக்கும்.
இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் மும்பை 16-ல், பெங்களூர் 9-ல் வெற்றி பெற்றுள்ளன.